சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் இன்று இந்திய நேரப்படி 11.30 மணிக்கு போட்டியிடுகிறது. ஆடவர் கிரிக்கெட் போட்டியின் இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை சோனி லைப் பக்கத்தில் காணலாம். முன்னதாக, அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 


2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நேபாளத்தை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்பின், அரையிறுதியில் இந்திய அணி வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஒருதலைப்பட்சமாக வீழ்த்தி அசத்தியது. இந்த இரண்டு போட்டிகளிலும் கிட்டத்தட்ட ஒரே அணியையே இந்தியா களமிறக்கியிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கூட, இந்திய அணி பெரிய மாற்றத்தை செய்து வீரர்களை மாற்றுமா என தெரியவில்லை. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ், சிவம் துபே, ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் என அனைவரும் சிறப்பாகவே செயல்பட்டனர். பந்துவீச்சிலும் ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர் என தத்தம் தங்களது பணிகளை செய்து அசத்துகின்றனர். அதன் அடிப்படையில், இந்திய அணி இன்றைய போட்டியிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு கலக்கு கலக்கினால் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் உறுதி. 






கணிக்கப்பட்ட இந்திய அணி லெவன்ஸ் அணி விவரம்:


யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, சாய் கிஷோர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.


இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான்:


இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆச்சரியமாக இருந்தது. முன்னதாக, பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், காலிறுதியில் முதலில் இலங்கையை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான், இறுதிப் போட்டியில் 13 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் விளையாடிய விதத்தின்படி, இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆப்கானிஸ்தான் அணியும் தனது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது. இந்த அணியில் வீரர்களை மாற்றம் செய்யும் மனநிலையில் கேப்டன் குல்பாடின் இருப்பதாக தெரியவில்லை.


கணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி லெவன்ஸ் அணி விவரம்:


செடிகுல்லா அடல், முகமது ஷாஜாத் (விக்கெட் கீப்பர்), நூர் அலி சத்ரான், ஷாஹிதுல்லா, அஃப்சர் ஜசாய், கரீம் ஜனத், குல்பாடின் நைப் (கேப்டன்), ஷரபுதீன் அஷ்ரஃப், கைஸ் அகமது, ஃபரித் அகமது, ஜாகிர் கான்.