உலகக்கோப்பை தொடர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முந்தைய நாள் (அக்டோபர் 5) தொடங்கியது.
இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 48 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது.
இதில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. நேற்றைய போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபரா வெற்றி பெற்றது.
ஆனால், போட்டி நடைபெற்ற மைதானமான நரேந்திர மோடி மைதானம் ரசிகர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இது சமூக வலைதளங்களிலும் பெரும் கிண்டலுக்கு உள்ளானது.
இதனிடையே, ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று (அக்டோபர் 6) பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது லீக் போட்டியிலும், முதல் இன்னிங்சில் ரசிகர்கள் கூட்டம் இன்றி மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது. இரண்டாவது இன்னிங்சின் போது ஓரளவிற்கு ரசிகர்கள் வருகை தந்தனர்.
ஒரு நாள் போட்டி மீது ஈர்ப்பு குறைகிறதா?
இச்சூழலில், உலகக்கோப்பை போட்டிகளுக்கே ரசிகர்கள் வரத்து குறைவாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு நாள் போட்டிகளுக்கான ஈர்ப்பு ரசிகர்களிடம் குறைந்து வருகிறதா? என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக், அகமதாபாத் மைதானம் வெறிச்சோடி காணப்பட்டதை அவருடைய எக்ஸ் பக்கத்தில் கலாய்த்து இருந்தார்.
இலவச டிக்கெட்டையாவது கொடுங்கள்:
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ”போட்டியை பார்க்க இலவச டிக்கெட்டுகளையாவது கொடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். மேலும், “மதிய நேரத்தில் போட்டி தொடங்குவதால், மாலை நேரம் ஆபீஸ் முடித்துவிட்டு ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க வருவார்கள் என எண்ணுகிறேன்.
இந்திய அணி விளையாடாத போட்டிகளுக்கு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிக்கெட் கொடுத்து உலக கோப்பையை நேரில் பார்க்க அனுமதிக்க வேண்டும்” என எக்ஸ் தளத்தில் கோரிக்கையும் விடுத்திருக்கிறார் சேவாக்.
டி20 போட்டிகளுக்கு குவிந்த ரசிகர் கூட்டம்:
நடப்பாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது போட்டி நடைபெற்ற எல்லா மைதானங்களிலுமே ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. டிக்கெட்டுகளுக்கான விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தது.
அதேசமயம் ஒரு சில போட்டிகளுக்கு கூட்டம் குறைவாக இருக்கும் என்றும் இந்தியா, பாகிஸ்தான் போட்டியின் போது அகமதாபாத் மைதானத்தில் நிச்சயம் கூட்டம் நிரம்பி வழியும் என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.