அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியது. நேற்றைய போட்டியில் அக்டோபர் 11ம் தேதி டெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசியாக விட்டுச்சென்ற இடத்திலிருந்து ரோஹித் சர்மா அதிரடியை தொடங்கினார். வெறும் 63 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்து சதத்தை மிஸ் செய்தார்.  


பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா 86 ரன்கள் எடுத்ததன்மூலம், ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி 7வது இடத்திற்கு முன்னேறினார். ரோஹித் தற்போது ஒருநாள் உலகக் கோப்பையில் 20 போட்டிகளில் 1195 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (2278 ரன்கள்), ரிக்கி பாண்டிங் (1743 ரன்கள்), குமார் சங்கக்கார (1532 ரன்கள்), பிரையன் லாரா (1225 ரன்கள்), ஏபி டி வில்லியர்ஸ் (1207 ரன்கள்), ஷாகிப் அல் ஹசன் (1201 ரன்கள்) ஆகியோருக்கு இவருக்கு முன்பு அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் உள்ளனர். 


உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, 21 போட்டிகளில் 1006 ரன்கள் குவித்து, ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்களில் நான்காவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து முன்னாள் கேப்டனும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் 22 போட்டிகளில் 860 ரன்கள் எடுத்துள்ளார்.


அதே நேரத்தில் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 300 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது பேட்ஸ்மேன் மற்றும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 300 சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் (331 சிக்சர்கள்), ஷாஹித் அப்ரிடி (351 சிக்சர்கள்) ஆகியோருடன் ரோஹித் இணைந்தார்.


ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள்: 



  • கிறிஸ் கெய்ல் - 49 சிக்ஸர்கள்

  • ஏபி டி வில்லியர்ஸ் - 37 சிக்ஸர்கள்

  • ரோஹித் சர்மா- 33

  • ரிக்கி பாண்டிங்-31

  • பிரண்டன் மெக்கல்லம்- 29


ரோஹித் ஷர்மா நேற்றைய போட்டியில் அரைசதத்தை எட்டியதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக 50+ ஸ்கோர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையிலும் விராட் கோலியை முந்தினார். 


ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக 50+ ஸ்கோர்களை அடித்த இந்தியர்கள்:



  1. சச்சின் டெண்டுல்கர்-21 (6 சதம், 15 அரைசதம்)

  2. ரோஹித் சர்மா- 11 (7 சதம், 4 அரைசதம்)

  3. விராட் கோலி - 10 (2 சதம், 8 அரைசதம்)

  4. யுவராஜ் சிங்-8 (1 சதம், 7 அரைசதம்)

  5. ராகுல் டிராவிட்-8 (2 சதம், 6 அரைசதம்)

  6. முகமது அசாருதீன் - 8 (8 அரைசதம்)


மேலும் சில.. 



  • சதம்: உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் ரோஹித் சர்மா. இதுவரை 7 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலி இதுவரை உலகக் கோப்பையில் 2 சதங்களை மட்டுமே அடித்துள்ளார்.

  • அதிக பவுண்டரிகள்: உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவின் பெயரில் 122 பவுண்டரிகள் உள்ளது.  விராட் கணக்கில் 106 பவுண்டரிகள் அடித்துள்ளார்.

  • அதிக சிக்ஸர்கள்: உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா மொத்தம் 34 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஆனால், விராட் கோலி தனது பெயரில் 5 சிக்சர்கள் மட்டுமே வைத்துள்ளார். 

  • ஸ்ட்ரைக் ரேட்: உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 101.96. மறுபுறம், விராட்டின் உலகக் கோப்பை ஸ்ட்ரைக் ரேட் 86.06.