2023 உலகக் கோப்பையில் நேற்று  இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. 


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை மோதலின் போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு  எதிராக இந்திய ரசிகர்கள் ’ஜெய் ஸ்ரீ ராம்’ ’ஜெய் ஸ்ரீ ராம்’ என குரல் எழுப்பினர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பல்வேறு கண்டனங்களை பதிவிட்டு வருகின்றன. 


ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாமுடன் இணைந்து 82 ரன் பார்ட்னர்ஷிப் மூலம் அச்சுறுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், அசாம் 50 ரன்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து அணி திடீரென சரிவை சந்தித்தது.  இதன் விளைவாக 2 விக்கெட்டுக்கு 155 ரன்களில் இருந்து 42.5 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


பாபர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே, ரிஸ்வான் 49 ரன்களுடன் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் வீழ்ந்தார் அப்போது, ரிஸ்வான் பெவிலியன் திரும்பியபோது கூட்டத்தில் இருந்த ஒரு பகுதியினர் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடத் தொடங்கினர். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






இந்திய ரசிகர்களின் இந்த செயலுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியா அதன் விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. இருப்பினும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக இந்திய ரசிகர்கள் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.  விளையாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். வெறுப்பைப் பரப்பும் கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.” என பதிவிட்டு இருந்தார். 


ரிஸ்வானை இந்திய ரசிகர்கள் கிண்டலடிக்க என்ன காரணம்..? 


கடந்த ஹைதராபாத்தில் நடந்த போட்டியின்போது ரிஸ்வான் மைதானத்திற்கு நடுவே நமாஸ் செய்துள்ளார். மேலும், இலங்கைக்கு எதிரான போட்டியின்போது சதமடித்த ரிஸ்வான், அப்போதும் நமாஸ் செய்தார். தொடர்ந்து இலங்கைக்கு எதிரான வெற்றிக்கு பிறகு பேசிய ரிஸ்வான், “எனக்கு ஒன்று மட்டுமே தெரியும், அது கடின உழைப்பு, அதைத்தான் அல்லாஹ் எனக்கு வழங்குகிறார்.  அல்லாஹ் என்னுடையது மட்டுமல்ல, விராட் கோலி, ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கும் கூட வழங்குகிறார்” என்று தெரிவித்தார். 






ரிஸ்வான் ஒரு குறிப்பிட்ட மதத்தை இந்திய ரசிகர்கள் முன்னிலையில் முன்னிலை படுத்துவதால்தான் இந்திய ரசிகர்கள் இப்படி செய்ததாகவும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.