ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டிகள் இந்திய மண்ணில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் இதுவரை 22 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் 10 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 


உலகக் கோப்பை போட்டிகளில் பாதி கூட இன்னும் முடியவில்லை. ஆனால் அதற்குள் உலகக்கோப்பை வரலாற்றில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் உள்ளன. அவை என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.


ரோஹித் சர்மா தனது பெயரில் ஒரு புதிய சாதனை:


ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சர்மா அபார சதம் விளாசினார். உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவின் ஏழாவது சதம் இதுவாகும். இதன் மூலம் உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். முன்னதாக இந்த சாதனை சச்சின் டெண்டுல்கர் பெயரில் இருந்தது. உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்கள் அடித்து தற்போது 2வது இடத்தில் இருக்கிறார். 


உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த தென்னாப்பிரிக்கா: 


இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 428 ரன்கள் குவித்தது. உலகக் கோப்பை வரலாற்றில் இது மிகப்பெரிய ஸ்கோராகும். முன்னதாக இந்த சாதனை ஆஸ்திரேலியாவின் பெயரில் இருந்தது. 2015 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 417 ரன்கள் எடுத்தது.


உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த எய்டன் மார்க்ரம்:


தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் இலங்கைக்கு எதிராக வெறும் 49 பந்துகளில் சதத்தை எட்டினார். உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே அதிவேக சதம். முன்னதாக இந்த சாதனை அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் பெயரில் இருந்தது. கெவின் ஓ பிரையன் 2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 54 பந்துகளில் சதம் அடித்தார்.


ஒரு இன்னிங்ஸில் அதிக சதங்கள் அடித்தவர்கள்:


இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக், வான் டர் டுசென் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் சதம் அடித்தனர். இதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக ஒரு அணிக்கு எதிரான ஒரே அணியை சேர்ந்த 3 பேட்ஸ்மேன்கள் சதம் கடந்தனர். உலகக் கோப்பையில் இதற்கு முன் இப்படி நடந்ததில்லை.


உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய ரன் சேஸ்:


இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 345 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே மிகப்பெரிய ரன் சேஸ் ஆகும். இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் மற்றும் அப்துல்லா ஷபிக் ஆகியோரின் சிறப்பான சதங்களால் பாகிஸ்தான் 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது.