கடந்த 2019 ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் மோர்கன் தலைமையிலான  இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது, எனவே இந்த முறை இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை 2023லிலும் மீண்டும் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணி வந்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு, இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்லும் வலுவான போட்டியாளர்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால் உலகக் கோப்பை தொடங்கப்பட்ட பின் அது நடக்கவில்லை. உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மிகவும் மோசமாக தொடங்கி, நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. 


இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இங்கிலாந்து அணி, மீண்டும் வெற்றி பாதையில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டாலும் அதுவும் நடக்கவில்லை. அதன்பிறகு, இங்கிலாந்து அணி தொடர்ந்து 5 போட்டிகளில் ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியடைந்து உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. கடந்த பல நாட்களாக, இங்கிலாந்து அணி இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள ஒரே அணியாகும். 


புள்ளிப் பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் அதாவது பத்தாவது இடத்தில் உள்ளது. இந்த நிலைக்கு இங்கிலாந்து வீரர்கள் பலர் காரணமாக இருந்தாலும், அவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் கேப்டன் ஜோஸ் பட்லர். இந்த உலகக் கோப்பையில் ஜோஸ் பட்லர் இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் முறையே 43, 20, 9, 15, 8, 10, 1 மற்றும் 5 ரன்களில் இன்னிங்ஸ் ஆடியுள்ளார். இதன்மூலம், இந்த எட்டு போட்டிகளில் 13.89 என்ற சராசரியில் மொத்தம் 111 ரன்கள் எடுத்துள்ளார். 


மேலும், இந்திய மண்ணில் கடைசியாக ஜாஸ் பட்லர் 15 இன்னிங்ஸ் விளையாடி 194 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், இவரது சராசரி 12.9 ஆகவும், ஸ்ரைக் ரேட் 89.0 ஆகவும் உள்ளது. அதிகபட்சமாக இவரது ஸ்கோர் 43 ரன்களே. 






முன்னதாக தோல்வி குறித்து பேசிய பட்லர், “ஒரே இரவில் மோசமான அணி என்ற பெயரை பெற்றுவிட்டோம். இது நம்ப முடியாத அளவுக்கு கடினமானது. எனினும், இந்த தோல்விக்கு, அணியின் கேப்டனாக நானே பொறுப்பேற்று கொள்கிறேன். எங்களிடம் நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தும், எங்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாதது ஏமாற்றமளிக்கிறது. கடந்த 2019 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்று உச்சத்தில் இருந்தோம். ஆனால், இன்றோ மோசமான அணியாக மாறிவிட்டோம்.


இத்தொடரில் இதுவரை எங்களது சிறப்பை நாங்கள் வெளிப்படுத்தவில்லை. உலகக் கோப்பைக்கு முன்பு  நான் சிறந்த ஃபார்மில் இருப்பதாக நினைத்தேன். ஆனால், எல்லாம் தலைகீழாக மாறியது. போட்டியில் நாங்கள் இதுபோன்ற தவறுகள் வெளிப்படுத்தி இதுவரை பார்த்ததில்லை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. மீதமுள்ள போட்டிகளில் நன்றாக விளையாட விரும்புகிறோம். முடிந்தவரை சாம்பியன் டிராபிக்கு செல்ல முயற்சிப்போம்” என்றார்.