உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்கியது முதல் இந்திய அணி தொடர்ந்து 8 போட்டிகளை ஆடி அபார வெற்றி பெற்றுள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.


இந்திய வீரர்கள் ஆதிக்கம்:


இதில், இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி இந்திய வீரர் சுப்மன்கில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 839 புள்ளிகளுடன் இந்த இடத்தை பிடித்துள்ளார்.


அதேபோல, ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடியை பின்னுக்குத் தள்ளி இந்திய வீரர் முகமது சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக திகழும் இவர்கள் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தியிருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாபர், ஷாகின் அப்ரிடிக்கு பின்னடைவு:


பேட்டிங் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் தற்போது  2வது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக ஆடி வரும் குயின்டின் டி காக் 771 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். உலகக் கோப்பைத் தொடரில் அபாரமாக ஆடி வரும் விராட் கோலி 770 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்ர் 5வது இடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 739 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளார்.


பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் இந்த உலகக் கோப்பைத் தொடரில் அபாரமாக பந்துவீசி வரும் இந்திய வீரர் முகமது சிராஜ் 709 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அவரைத் தொடரந்து, தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகராஜ் 694 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். ஆடம் ஜம்பா 3வது இடத்திலும், குல்தீப் யாதவ் 4வது இடத்திலும், ஷாகின் அப்ரிடி 5வது இடத்திலும் உள்ளனர். ரஷீத்கான்7வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் பும்ரா 8வது இடத்திலும், ஷமி 10வது இடத்திலும் உள்ளனர்.


ஆல்ரவுண்டர் தரவரிசை:


ஒருநாள் போட்டிகளில்  ஆல்ரவுண்டருக்கான தரவரிசை பட்டியலில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது நபி 2வது இடத்திலும், சிக்கந்தர் ராசா 3வது இடத்திலும் உள்ளனர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்த மேக்ஸ்வெல் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 10வது இடத்தில் உள்ளார்.