இந்திய திரையுலகின் பிரபல நடிகையாக உலா வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இந்தி, தமிழ் என பல மொழிகளில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் பெற்றது முதலே மிகவும் பிரபலமாக உள்ளார். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
சோயிப் அக்தர் கடும் கண்டனம்:
ஐஸ்வர்யா ராய்க்கு பாகிஸ்தான் நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் ஐஸ்வர்யா ராய் பற்றி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்துல் ரசாக் பேசும்போது ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்வதால் மட்டுமே திறமையான குழந்தை பிறக்கும் என்று நினைத்தால் அது நடக்காது என்றார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் குவிந்தது. அந்த சந்திப்பின்போது முன்னாள் வீரர்கள் ஷாகித் அப்ரிடி மற்றும் உமர்குல் உடனிருந்தனர்.
அப்துல் ரசாக்கின் கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் சோயிப் அக்தர் தனது எக்ஸ் பக்கத்தில், “ அப்துல் ரசாக்கின் இந்த பொருத்தமற்ற நகைச்சுவையை கடுமையாக கண்டிக்கிறேன். எந்த பெண்ணையும் இவ்வாறு நடத்தக்கூடாது. அவர் அருகில் இருந்த நபர்கள் கைதட்டி சிரிப்பதை காட்டிலும் குரல் எழுப்பியிருக்க வேண்டும்”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக், ஐஸ்வர்யா ராய் பற்றி பேசிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது. கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில், அபு்துல் ரசாக் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள விளக்கத்தில், “ நான் அப்துல் ரசாக். நேற்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது நாங்கள் கிரிக்கெட் பயிற்சி பற்றி ஆலோசித்தோம். அப்போது, நாக்கு தவறி தவறுதலாக ஐஸ்வர்யா ராய் பெயரை கூறிவிட்டேன். தனிப்பட்ட முறையில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நான் வேறு சில உதாரணங்களை கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், தவறுதலாக அவர் பெயரை பயன்படுத்தி விட்டேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Rohit Sharma Record: உலகக்கோப்பையில் 50 சிக்ஸர்கள்! புதிய வரலாறு படைத்த ஹிட் மேன் ரோகித்சர்மா!