உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுவது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கிரிக்கெட்டின் திருவிழாக்களில் ஒன்றாக 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 32 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வழக்கத்தை விட அனைத்து போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. 


நடப்பு தொடரை பொறுத்தவரை இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் வலம் வருகிறது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்து விடும். இந்திய அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா சிறந்த பார்மில் உள்ளார். அதேபோல் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இன்னும் சுப்மல் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் தங்கள் பணியை சிறப்பாக செய்தால் வெற்றி இந்திய அணிக்கே கிடைக்கும். பந்து வீச்சிலும் பும்ரா, ஷமி, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் மிரட்ட காத்திருக்கிறார்கள்.


அதேசமயம் இந்த உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் ஆடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 4 போட்டிகள் இருக்கும் நிலையில், அனைத்திலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கான பந்தயத்தில் பிற அணிகளுக்கு கடுமையான சோதனையை கொடுக்க வாய்ப்புள்ளது.அந்த அணி கடைசியாக ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. இதனால் சோகமாக உள்ள ரசிகர்களுக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்று இலங்கை அணி நம்பிக்கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. அதேசமயம் இந்தியா - இலங்கை அணிகள் இதுவரை 167 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் இதில் 98 போட்டிகளில் இந்தியாவும், 57 போட்டிகளில் இலங்கையும் வெற்றி கண்டுள்ளது.  ஒரு ஆட்டம் டிரா ஆன நிலையில், 11 ஆட்டங்கள் முடிவில்லாமல் கைவிடப்பட்டது. அதேபோல் உலகக்கோப்பையில் இரு அணிகளும் 9 முறை நேருக்கு நேர் மோதி தலா 4 வெற்றிகளுடன் சம நிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. 


மும்பை வான்கடே மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெறும் இப்போட்டியில் யார் வெற்றி பெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் வெகுவாக எழுந்துள்ளது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சிறந்தது என்பதால் இதில் ரன் மழையை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.