சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர், கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் சில அணிகள் தடுமாறினாலும், சில அணிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.அதோடு, பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

இந்நிலையில் இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதலிடம்:

நடப்பு உலகக் கோப்பையில் பாதி லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உடன் சேர்ந்து தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளன.

அதிலும், தென்னாப்ரிக்கா அணி, ரன் ரேட் விகிதத்தில் மற்ற அனைத்து அணிகளை காட்டிலும் மிகவும் வலுவாக உள்ளது. விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ள அந்த அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

தென்னாப்பிரிக்கா அபாரம்:

அதன்படி, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர் குயின் டி காக் அதிரடியாக விளையாடினார். முன்னதாக மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அந்த அணியின் கேப்டன், தெம்பா பவுமா 28 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் களமிறங்கிய வான்டெர் டு சென் மற்றும் குயின்டன் டி காக் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து  சிறப்பாக விளையாடினார்கள்.

அதன்படி 40 ஓவர்கள் வரை களத்தில் நின்ற குயின்டன் டி காக் 116 பந்துகளில்,  10 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 114 ரன்கள் குவித்தார். மறுபுறம் வான்டெர் டு சென்னும் அதிரடி காட்டினார். 118  பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என மொத்தம்  133 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர், வந்த டேவிட் மில்லர் 30 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 53 ரன்கள் எடுத்தார்.  இவ்வாறாக அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. இந்நிலையில் 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி.

190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி:

தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் களமிறங்கினார்கள். அந்த வகையில், டெவோன் கான்வே 6 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று  2 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார்.  பின்னர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 16 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

மறுபுறம் பொறுமையாக விளையாடிய வில் யங் 37 பந்துகள் களத்தில் நின்று 33 ரன்கள் எடுத்தார். சரிவில் இருந்த அந்த அணியை மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டாம் லாதம் 15 பந்துகள் களத்தில் நின்ற 4 ரன்களில் நடையைக் கட்ட, மறுபுறம் டேரில் மிட்செல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது நியூசிலாந்து அணி. இதனால், தென்னாப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

புள்ளிப்பட்டியல் விவரம்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
தென்னாப்ரிக்கா 7 6 1 12
இந்தியா 6 6 0 12
ஆஸ்திரேலியா 6 4 2 8
நியூசிலாந்து 7 4 3 8
பாகிஸ்தான் 7 3 4 6
ஆப்கானிஸ்தான் 6 3 3 6
இலங்கை 6 2 4 4
நெதர்லாந்து 6 2 4 4
வங்கதேசம் 7 1 6 2
இங்கிலாந்து 6 1 5 2