உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி இதுவரை ஆடிய 5 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இதில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது ஆகும்.
ஹர்திக் பாண்ட்யா காயம்:
இந்த நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசியபோது ஹர்திக் பாண்ட்யா காலில் தசைபிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த போட்டியில் அவர் அதற்கு அடுத்து ஆடவில்லை. மேலும், காயம் காரணமாக முக்கியத்துவம் வாய்ந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.
இந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். அங்கு அவருக்கு உடற்தகுதி பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்திய அணி அடுத்து ஆடும் 2 போட்டிகளில் ஆட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
எப்போது வருவார்?
அதாவது, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், நவம்பர் 2ந் தேதி நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் ஆடமாட்டார் என்று தெரியவந்துள்ளது. இதனால், அவர் வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு பேட்ஸ்மேனாகவும், பவுலராகவும் ஹர்திக் பாண்ட்யா பல நெருக்கடியான தருணங்களில் கைகொடுத்துள்ளார். இதனால், வரும் போட்டிகளிலும் அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அவர் மீண்டும் ஆடும் லெவனில் களமிறங்கினால், சூர்யகுமார் யாதவ் பெஞ்சில் உட்கார வைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
முக்கிய ஆல்ரவுண்டர்:
இந்திய அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்துள்ள ஹர்திக் பாண்ட்யா மிடில் ஆர்டரில் முக்கிய பங்களிப்பு வகித்து வருவதுடன், பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோருடன் கூடுதல் வேகப்பந்துவீச்சாளராகவும் அசத்தி வருகிறார். அவர் இதுவரை 86 ஒருநாள் போட்டிகளில் ஆடி 11 அரைசதங்களுடன் 1769 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 92 ரன்களை எடுத்துள்ளார். மேலும், ஒருநாள் போட்டியில் 84 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 24 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆகும்.
ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதத்துடன் 532 ரன்களும், 17 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக 92 டி20 போட்டிகளில் ஆடி 3 அரைசதங்களுடன் 1348 ரன்கள் எடுத்துள்ளார். 73 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
மேலும் படிக்க: World Cup 2023: பாகிஸ்தான் அரையிறுதிக்கு வரவில்லை என்றால், பாபரின் கேப்டன் பதவி காலியாம்.. எச்சரிக்கும் பிசிபி..!
மேலும் படிக்க: Asian Para Games: பதக்கங்களை குவித்து பட்டையை கிளப்பும் இந்தியர்கள் - ஆசிய பாரா விளையாட்டில் அசத்தல்