இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்கும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட தற்காலிக அணியை அறிவித்தது.


இதற்காக பெரிய மாற்றங்களை செய்துள்ள இங்கிலாந்து அணி அதிரடி பேட்ஸ்மேன் ஹாரி புரூக் மற்றும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆச்சர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டது. இதில், கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது முடிவை மாற்றிக்கொண்டு இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார். 


ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை மாற்றிக் கொண்டதாகவும், அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்குத் திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் தேர்வாளர் லுக் ரைட், அதே 15 பேரை கொண்ட அணியை நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கான அணியை அறிவித்து, இதே அணிதான் தற்காலிக உலகக் கோப்பை அணியாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டார். 


இதுகுறித்து லுக் ரைட் தெரிவிக்கையில், ”இதுதான் உலகக் கோப்பைக்கான நாங்கள் முன்வைக்கப் போகும் அணி. சில முக்கிய வீரர்கள் இழக்கப் போவது நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உள்ளது. இதன்மூலம், இங்கிலாந்து கிரிக்கெட்டில் இருக்கும் வலிமையையும், ஆழத்தையும் நாம் தெரிந்துகொள்ளலாம். 


பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்புவது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. போட்டியில் அவரது வெற்றிபெறும் திறன், தலைமைத்துவம் பட்லருக்கு உதவியாக இருக்கும். ஒவ்வொரு இங்கிலாந்து ரசிகரும் அவரை மீண்டும் இங்கிலாந்து ஒருநாள் ஜெர்சியில் பார்த்து மகிழ்வார்கள்” என்று தெரிவித்தார். 






ஐசிசி அறிவுறுத்தலின்படி, 2023 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் வருகின்ற செப்டம்பர் 5 ம் தேதிக்குள் தங்களது தற்காலிக அணியை அறிவிக்க வேண்டு. அதன்பிறகு, சில மாற்றங்களை செப்டம்பர் 28ம் தேதி வரை செய்துக்கொள்ளலாம்.


உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து தற்காலிக அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்.


இங்கிலாந்து வருகின்ற அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேயத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக, இரு அணிகளும் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.