இந்தியா கிரிகெட் அணி அயர்லாந்துக்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட அங்கு சென்றுள்ளது. இம்முறை மிகவும் இளம் இந்திய வீரர்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய அணியை  வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தலைமையில் அயர்லாந்துக்கு அனுப்பியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். 


11 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு பும்ரா திரும்புவதால் பும்ராவின் பந்து வீச்சு எப்படி இருக்கும் என அனைவரது மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு இப்போது இருந்தே இருக்கிறது. இந்த தொடரில் பும்ரா எதிர்பார்த்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றால் இம்மாத இறுதியில் துவங்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கும் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் துவங்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கும் இந்திய அணி, தனக்கான வேகப்பந்து வீச்சாளரை தேட வேண்டிய நிலை ஏற்படும். அதனால் இந்த தொடர் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. 


ஆகஸ்ட் 18-ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்குவுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணி அயர்லாந்தை சென்றடைந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. இந்திய அணியின் ஜெர்ஸி பார்ட்னராக உள்ள அடிடாஸ் இந்திய அணிக்கு கருப்பு நிற ஜெர்ஸியை வழங்கியுள்ளதால் இந்திய அணி வீரர்களைப் பார்க்கும்போது நியூசிலாந்து அணியினரைப் பார்ப்பதுபோல் உள்ளது. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரர் ரிங்கு சிங். அதிரடியாக ஆடக்கூடிய இவர் சிறந்த ஃபினிஷராக ஐபிஎல் தொடரில் கருதப்படுகிறார். 


அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி : ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது , ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான்


அனுபவ வீரர்களுக்கு ஓய்வு..


அயர்லாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 23ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல் டி20 போட்டி 18ம் தேதியும்,  இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 20 அன்று நடைபெறும். தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெறவுள்ளது. ஆசிய கோப்பையை கருத்தில் கொண்டு, அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து அனைத்து அனுபவ வீரர்களுக்கும் ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.


இதையடுத்து, இந்திய அணியின் முழுநேர கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.