உலகக் கோப்பை கிரிக்கெட் 2023இன் 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடி வரும் 10 அணிகளில் 8 அணிகள் ஏற்கனவே தலா ஒரு போட்டியில் விளையாடிய நிலையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனது முதல் போட்டில் களம் இறங்கின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸை வார்னர் மற்றும் மிட்ஷெல் மார்ஷ் தொடங்கினர். போட்டியின் மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் மிட்ஷெல் மார்ஷ் தனது விக்கெட்டினை பும்ராவிடம் இழந்து, ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அதன் பின்னர் வந்த ஸ்மித் வார்னருடன் இணைந்து அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்தனர். இவர்களின் கூட்டணியால் ஆஸ்திரேலியா அணி ஓரளவிற்கு அணியை மீட்டுக் கொண்டு வந்தனர். 40 ரன்களை எட்டிய வார்னர் அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குல்தீப் யாதவ் பந்து வீச்சில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 


அதன் பின்னர் வந்த லபுசேன் மைதானத்தின் நிலைமையை கணிப்பதற்கு நேரம் எடுத்துக் கொண்டார்.  25வது ஓவரில்தான் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை எட்டியது. இதற்கிடையில் 46 ரன்கள் சேர்த்த ஸ்மித் ஜடேஜா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் போட்டியின் 30வது ஓவரை வீசிய ஜடேஜா அந்த ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அந்த ஓவரில் லபுசேன் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரது விக்கெட்டினை கைப்பற்றி நெருக்கடியை அதிகரித்தார். 


இதன் பின்னர் மேக்ஸ் வெல்லின் விக்கெட்டினை குல்தீப் யாதவ் கைப்பற்ற, அதன் பின்னர் அஸ்வின் கேமரூன் க்ரீன் விக்கெட்டினை அஸ்வின் கைப்பற்றினார். இதனால் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு இருந்த ஒட்டுமொத்த நம்பிக்கையும் வீணாகப் போனது. ஆஸ்திரேலியா அணி 40 ஓவர்கள் முடிவில்தான் 150 ரன்களைக் கடந்தது. ஆஸ்திரேலியாவின் முதல் சிக்ஸரை ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பறக்க விட்டார். பொறுப்பாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பேட் கம்மின்ஸ் பந்தை தூக்கி அடித்து தனது விக்கெட்டினை பும்ரா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். 


இறுதியில் ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து  199ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களும், டேவிட் வார்னர் 41 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சிராஜ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 


ஆஸ்திரேலியா தரப்பில் இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே விளாசப்பட்டது. அதில் ஒரு சிக்ஸர் பேட் கம்மின்ஸும், ஒரு சிக்ஸர் மிட்ஷெல் ஸ்டார்க்கும் விளாசினர்.