அமெரிக்கா, சீனா, ரஷியாவை தொடர்ந்து உலக அளவில் பலம் வாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நாட்டின் ராணுவ வலிமைக்கு பெரும் பங்காற்றி வருவது இந்திய விமானப்படை. கடந்த 1932ஆம் ஆண்டுதான், இந்திய விமானப்படை நிறுவப்பட்டது. 


இந்திய விமானப்படை தினம்:


பல சவால்களுக்கு மத்தியில் 24 மணி நேரமும் இந்திய வான் எல்லையை இந்திய விமானப் படை வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். இவர்களின் அர்ப்பணிப்பு, துணிச்சலை கெளரவிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 


அந்த வகையில், இந்திய இறையாண்மையை பாதுகாத்து வரும் இந்திய விமானப்படை வீரர்களின் திறனை பறைசாற்றும் வகையில் நாடு முழுவதும் கண்கவர் வான் நிகழ்ச்சிகள், அணிவகுப்புகள் இன்று நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல விமான தளங்களில், இந்திய விமானப்படை தினத்தின் 91வது ஆண்டு விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.


நீல நிற உடையில் சச்சின் மிரட்டல்:


83ஆவது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு கடந்த 2015ஆம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கெளரவ குரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், 91ஆவது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு வான்படை வீரர்களுக்கு கெளரவ குரூப் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இந்திய விமானப்படை வீரர் அணியும் நீல நிற உடை அணிந்து சச்சின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். எக்ஸ் வலைதள பக்கத்தில் சச்சின் வெளியிட்ட வீடியோ செய்தியில், "இந்திய விமானப்படையின் 91ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்திய விமானப்படையின் அனைத்து வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 


நீல நிற உடை அணிவதற்கான வாய்ப்பை வழங்கிய இந்திய விமானப்படைக்கு நன்றி. நான் மிகுந்த பெருமையுடனும் மரியாதையுடனும் சீருடையை அணிகிறேன். இந்திய விமானப்படையின் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் இந்தியாவுக்காக விளையாடுகையில் நீல நிற உடை அணிந்தபோதும் அப்படித்தான் உணர்ந்தேன்" என தெரிவித்துள்ளார்.


 






இந்திய விமானப்படையின் சாதனைகள்:


பாகிஸ்தானுடன் இந்திய விமானப்படை நான்கு முறை மோதலில் ஈடுபட்டது. 1947-1948, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற வங்கத் தேசப் போரிலும் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரிலும் ஈடுபட்டது. கடந்த 1961ஆம் ஆண்டு, இந்தியாவுடன் கோவா இணைக்கப்பட்டபோதும் 1962ஆம் ஆண்டு சீன ராணுவத்திற்கு எதிரான போரிலும் இந்திய விமானப்படை ஈடுபட்டது.