விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பையின் 24-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி இன்று (அக்டோபர் 24) மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இன்றைய போட்டியில், முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கினார்கள். 15 பந்துகள் களத்தில் நின்று 9 ரன்கள் மட்டுமே எடுத்து மிட்செல் ஆட்டமிழக்க, மறுபுறம் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடினார்.
அதிரடியாக ஆடிய வார்னர்:
மொத்தம் 93 பந்துகள் களத்தில் நின்ற அவர் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி 104 ரன்களை குவித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை (6 சதம்) சமன் செய்துள்ளார்.
முன்னதாக கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் வார்னர் சதம் அடித்தார்.
அந்த போட்டியில், 124 பந்துகளில் 14 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் என மொத்தம் 163 ரன்களை குவித்தார்.
உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்தவர்கள்:
உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார்.
இதுவரை அவர் விளையாடிய 22 இன்னிங்ஸில் மொத்தம் 7 சதங்களை பதிவு செய்துள்ளார். அதேபோல், இன்றைய சதத்தின் மூலம் சச்சினின் சாதனையை சமன் செய்தார் டேவிட் வார்னர். அதன்படி, உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடிய 23 இன்னிங்ஸில் 6 சதங்களை விளாசியுள்ளார். மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 44 உலகக் கோப்பை இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ளார். அதில் மொத்தம் 6 சதங்கள் அடித்துள்ளார்.
நான்காவது இடத்தில் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கரா இருக்கிறார். மொத்தம் 35 இன்னிங்ஸ் விளையாடி உள்ள அவர் 5 சதங்கள் அடித்துள்ளார். அதேபோல், ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் உள்ளார். மொத்தம் 42 இன்னிங்ஸ் விளையாடி உள்ள அவர் 5 சதங்களை பதிவு செய்துள்ளார்.
மேலும் படிக்க: ODI WC 2023 Maxwell: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிவேக சதம்! 40 பந்துகளில் வரலாறு படைத்த மேக்ஸ்வெல்!
மேலும் படிக்க:AUS Vs NED Score LIVE: 400 ரன்கள் இலக்கை நெருங்குமா நெதர்லாந்து? 3 ஓவர்களில் 27 ரன்கள்!