AFG Vs NED, Match Highlights: நெதர்லாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி, நடப்பு உலகக் கோப்பையில் 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது.


அடுத்தடுத்து சரிந்த விக்கெட்:


லக்னோ ஏகனா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி நிர்ணயித்த, 180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆப்கான்ஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் மற்றும் ஜாட்ரன் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். அதிரடி ஆட்டக்காரரான குர்பாஸ் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜாட்ரன் 20 ரன்களில் நடையை கட்டினார். இதனால், ஆப்கானிஸ்தான் அணி 55 ரன்களை சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


ரஹ்மத் ஷா அதிரடி:


இதையடுத்து மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மதுல்லா சாஹிதி ஆகியோர், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சீரான இடைவெளியில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினர். இதில் ரஹ்மத் ஷா அரைசதம் கடந்தார். தொடர்ந்து 52 ரன்கள் சேர்த்து இருந்தபோது, சாகிப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மதுல்லா சாஹிதி கூட்டணி 3வது விக்கெட்டிற்கு 74 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டது. இதைதொடர்ந்து அமைந்த, ஷாஹிதி மற்றும் ஒமர்ஜாய் கூட்டணியும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஷாஹிதி அரைசதம் கடந்தார்.


ஆப்கானிஸ்தான் அபார வெற்றி:


இறுதியில் 31.3 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி பெற்ற 4வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அரையிறுதிக்கான வாய்ப்பிலும் தொடர்ந்து நீடிக்கிறது. அதேநேரம், நெதர்லாந்து அணி 7 லீக் போட்டிகளில் விளையாடி 5வது தோல்வியை பதிவு செய்துள்ளது.


முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:


டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நெதர்லாந்து அணியின் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வெஸ்லே  ஒரு ரன்னிலேயே பெவிலியன் திரும்பினார். மேக்ஸ் ஒ`டவுட்  42 ரன்கள் சேர்த்தார். ஆக்கர்மேன் 23 ரன்களில் நடையை கட்டினார்.  கேப்டன் எட்வர்ட்ஸ் எதிர்பாராத விதமாக, முதல் பந்திலேயே ரன் -அவுட் முறையில் டக் அவுட் ஆனார். லீடே, சாகிப் மற்றும் பீக் ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். ஆர்யன் தத் 10 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் எங்கல்பிரெக்ட் மற்றும் நிலைத்து நின்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் விளாசிய அவர் 58 ரன்கள் சேர்த்து இருந்தபோது  ஆட்டமிழந்தார். வாண்டர் மெர்வ் 11 ரன்களில் வெளியேற, மீக்ரான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 46.3 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களை எடுத்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றிய பதிவு செய்துள்ளது.