இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்று தனது 30 பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஹர்திக் பாண்டியா 11 அக்டோபர் 1993 அன்று குஜராத்தில் உள்ள சூரத்தில் பிறந்தார். 


சர்வதேச போட்டியில் அறிமுகம்:


ஹர்திக் பாண்டியா 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானார். ஐபிஎல்-ல் அவரது அசாதாரண திறமை மற்றும் அற்புதமான ஆட்டத்திற்குப் பிறகு, அவர் இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனவரி 2016 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் தனது 22வது வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அந்த ஆட்டத்தில் ஹர்திக் ஒரு மறக்கமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். அன்றைய போட்டியில் அவர் மூன்று ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.


அதே ஆண்டு அக்டோபரில் தர்மசாலாவில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹர்திக் அறிமுகமானார். அந்த போட்டியிலும் அபாரமாக விளையாடி 7 ஓவர்களில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


ஹர்திக் பாண்டியா இதுவரை தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 83 போட்டிகளில் 1769 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 போட்டிகளில் 532 ரன்களும், 92 டி20 போட்டிகளில் 1348 ரன்களும் எடுத்துள்ளார். அதேபோல், பந்துவீச்சில் ஹர்திக் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 80 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் 17 விக்கெட்டுகளையும், டி20யில் 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக, தனது சர்வதேச வாழ்க்கையில், பாண்டியா 18 அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்தை அடித்துள்ளார். இதுபோக, 186 போட்டிகளில் விளையாடி 3649 ரன்கள் குவித்து 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


ஹர்திக் பாண்டியா செய்த 5 தரமான சம்பவங்கள்: 


1. சாம்பியன்ஸ் டிராபி இறுதி 2017: பாகிஸ்தானுக்கு எதிராக 76 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு ஒரு தனி வீரராக போராடி கிட்டத்தட்ட வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இருப்பினும், அன்றைய போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. 


2. ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மென்ஸ் Vs இங்கிலாந்து 2018: இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் போட்டியில், ஹர்திக்கின் ஆல்ரவுண்ட் திறமையால், டிரென்ட் பிரிட்ஜ் நோட்டிம்காமில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது. அன்றைய போட்டியில் இந்திய அணிக்காக அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, அரை சதமும் அடித்திருந்தார்.


3. 83 vs ஆஸ்திரேலியா: 2017 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில், இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போது,  ஹர்திக் பாண்டியா 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.


4. கேப்டனாக முதல் பட்டம்: 2022 ம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவுக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது. ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி கேப்டனாக முதல் முறையாக பட்டம் வென்றார். அந்த சீசனில் 487 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


5. முதல் டெஸ்ட் சதம் Vs இலங்கை: 2017 ம் ஆண்டு ஹர்திக் பாண்டியா இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தொடரின் 3வது போட்டியில் ஹர்திக் 7 சிக்ஸர்களுடன் 108 ரன்கள் எடுத்தார்.


கடந்த 2020 ஜனவரி மாதம், ஹர்திக் பாண்டியா, இந்தியாவைச் சேர்ந்த செர்பிய நடனக் கலைஞரும் நடிகையுமான நடாசா ஸ்டான்கோவிச்சுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜூலை 30, 2020 அன்று குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அகஸ்தியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.