உலகக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிறிய அணிகளாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் கண்டிப்பாக இந்த தொடரில் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் என்று ரசிகர்களாலும், கிரிக்கெட் நிபுணர்களாலும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று நடந்த போட்டியில் மிகப்பெரிய அதிர்ச்சியாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தா் 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து ரசிகர்களின் தூக்கத்தை கலைத்துள்ளது. இந்த தொடர் தொடங்கும் முன் உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்று என கருதப்பட்ட அணிகளில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் ஒன்று ஆகும். இன்றைய தோல்வி இங்கிலாந்துக்கு பெரிய பின்னடைவு ஆகும்.
உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி தன்னை விட பலம் குறைந்த அணிகளிடம் தோற்பது இது ஒன்றும் முதன்முறை அல்ல. முதல் உலகக் கோப்பையில் இருந்து ஆடி வரும் இங்கிலாந்து அணி இதுவரை குட்டி அணிகளிடம் தோற்ற விவரத்தை கீழே காணலாம்.
1992ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக தோல்வி:
1992ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் மோதின. ஆல்ப்ரி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி கேப்டன் டேவ் மட்டும் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக இங்கிலாந்துக்கு 137 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து, 137 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கேப்டன் கூச் டக் அவுட்டாக, போத்தம் 18 ரன்களில் அவுட்டாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணியை ஃபேர்பிரதர் – ஸ்டீவர்ட் ஜோடி காப்பாற்ற முயற்சித்தது. ஆனாலும், ஃபேர்பிரதர் 20 ரன்களிலும், ஸ்டீவர்ட் 29 ரன்களிலும் அவுட்டாக 49.1 ஓவர்களில் 125 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது. இதனால், ஜிம்பாப்வே 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2011 – வங்கதேச அணிக்கு எதிராக தோல்வி:
2011ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 225 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ட்ராட் 67 ரன்களையும். மோர்கன் 63 ரன்களை விளாசினர். 226 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி இம்ருல் கையஸ் 60 ரன்கள் விளாச, கேப்டன் ஷகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுக்க, மகமுதுல்லா, இஸ்லாம் கடைசி கட்ட பேட்டிங்கால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2015 – வங்கதேசத்திறகு எதிரான தோல்வி:
2015ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிராக முதலில் இங்கிலாந்து பந்துவீசியது. தமிம் இக்பால், இம்ருல் கையஸ் 2 ரன்களில் அவுட்டாக செமியா 40 ரன்கள் எடுத்தார். மகமுதுல்லா – முஷ்பிகுர் ரஹிம் ஜோடி பொறுப்புடன் ஆடினர். சிறப்பாக ஆடிய மகமுதுல்லா 103 ரன்களும், ரஹீம் 89 ரன்களும் எடுக்க இங்கிலாந்துக்கு 276 ரன்கள் இலக்காக நிர்ணயித்தனர்.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பெல் 63 ரன்கள் எடுக்க அடுத்த வந்த வந்த வீரர்கள் சொதப்பினர். பட்லர் அதிரடியாக 65 ரன்கள் எடுக்க, வோக்ஸ் 42 ரன்களுக்கு அவுட்டானார். இதனால், கடைசியில் இங்கிலாந்து அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் வங்கதேசம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று 69 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை நடப்பு சாம்பியனான இங்கிலாந்து சந்தித்துள்ளது. இது இங்கிலாந்து ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.