2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. முன்னதாக, நேற்றைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி வரை 12 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இச்சூழலில் இன்று (அக்டோபர் 15) 13 வது லீக் போட்டி டெல்லி அருண் ஜேட்லீ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த 13 வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.
அதிரடியாக ஆடிய ஆப்கானிஸ்தான்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அதிரடியாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் 114 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
முன்னதாக, இந்த போட்டியின் ஒன்பதாவது ஓவரின் போது இங்கிலாந்து வீரர் ரன்களை அள்ளி கொடுக்க, சாம் கரண் கோபத்துடன் காணப்பட்டார். அப்போது, சாம் கரண் எல்லைக் கோட்டின் அருகே நின்று கொண்டிருந்தார்.
கேமராவை தள்ளிவிட்ட சாம் கரண்:
திடீரென எதிர்பாராத விதமாக க்ளோஸ்-அப் ஷாட் எடுப்பதற்காக ஒரு கேமராமேன் கரண் அருகில் வந்த போது, ஏற்கனவே கோபத்தில் இருந்த அவர் கேமராவை தனது கையால் திருப்பித் தள்ளிவிட்டார். அப்போது அவர், “விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வர வேண்டாம் ” என்று ஒளிப்பதிவாளரிடம் கடிந்து கொண்டார்.
இந்நிலையில், போட்டியின் போது விளையாட்டு வீரர்களை தொந்தரவு செய்வது போல் கேமராமேன்கள் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்று ஒரு தரப்பினரும், ஒரு விளையாட்டு வீரர் இப்படி நடந்து கொள்வது தவறான ஒன்று என இன்னொரு தரப்பினரும் சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில், 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் இங்கிலாந்து அணி 33 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
மேலும் படிக்க: IND vs PAK: இதுவா நேரம்...கோலியிடம் ஜெர்ஸியை பரிசாக பெற்ற பாபர் அசாம்... வறுத்தெடுத்த வாசிம் அக்ரம்!
மேலும் படிக்க: Sachin and Akhtar: "நண்பனே, நண்பனே" கேலியும், கிண்டலும் செய்து கொண்ட சச்சின், அக்தர்!