Ashwin - Jadeja: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சின் முதுகெழும்பாக இருப்பவர்கள் தான் அஸ்வினும் ஜடேஜாவும். இவர்கள் இருவரும் சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பது குறித்து எந்த கவலையும் இல்லாமல் இந்திய அணிக்கு விக்கெட்டுகளை அள்ளித்தருபவர்கள்.
இவர்களது பந்து வீச்சினால் மட்டும் இந்திய அணி வென்றுள்ள போட்டிகள் ஏராளம். அதேபோல் இந்திய அணி தோல்வியைத் தழுவும் என டெஸ்ட் கிரிக்கெட்டின் மூன்றாவது நாளிலோ அல்லது நான்காவது நாளிலோ கிரிக்கெட் விமர்சகர்கள் கூறும் போது அவர்களின் விமர்சனத்தில் ஒருலாரி மண்ணைப் போட்டதுபோல், தங்களது அசாத்திய பந்துவீச்சில் இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டது மட்டும் இல்லாமல், பல சாதனைகளையும் படைத்துள்ளனர்.
இவர்களின் தனித்தனி சாதனைகள் பல இருந்தாலும் இருவரும் இணைந்து படைத்த சாதனை குறித்து இந்த தொகுப்பில் காணலாம். இருவரும் இணைந்து இதுவரை 48 டெஸ்ட் போட்டிகளில் 495 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதில் அஸ்வின் 271 விக்கெட்டுகளும் ஜடேஜா 224 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். இவர்களின் கூட்டணியில் போட்டி ஒன்றுக்கு சராசரியாக 10.31 விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஜோடியின் விக்கெட் சராசரியில் முதல் இடத்தில் உள்ளனர்.
ஒட்டுமொத்த சர்வதேச அரங்கில் இவர்கள் 12வது இடத்திலும், சர்வதேச அரங்கில் தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் ஜோடிகளில் 4வது இடத்திலும் உள்ளனர். இந்திய அளவில் இவர்களுக்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் கூட்டணி சிறப்பாக பந்து வீசி 54 போட்டிகளில் 501 விக்கெட் கைப்பற்றியுள்ளது. அதேபோல், இவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில், அஸ்வின் 486 விக்கெட்டுகளும் ஜடேஜா 273 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
அதேபோல், சர்வதேச அளவில் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் மற்றும் போர்ட் ஜோடி இதுவரை 1031 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். இதில் ஆண்டர்சன் 535 விக்கெட்டுகளும் போர்ட் 496 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர். இதில் இவர்கள் இருவரும் வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது கூடுதல் தகவல். இவர்கள் இருவரும் இதுவரை 136 போட்டிகளில் விளையாடி 7.58 சராசரியில் விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.
அதன் பின்னர், ஷேன் வார்ன் மற்றும் மெஹர்கர்த் ஜோடி ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பந்து வீச்சு ஜோடியாக இருந்துள்ளது. இவர்கள் ஜோடி 104 போட்டிகளில் விளையாடி 1001 விக்கெட்டுகள் கைப்பற்றியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆயிரம் விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜோடியும் இவர்கள் தான். இவர்கள் சாதனையைத் தான் ஆண்டர்சன் மற்றும் போர்ட் ஜோடி முறியடித்து தற்போது சர்வதேச அளவில் முதல் இடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தில், ஸ்ரீ லங்கா அணியின் முரளிதரன் மற்றும் வாஸ் கூட்டணி மொத்தம் 95 போட்டிகளில் விளையாடி, 895 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். இதில் முரளிதரன் தனது தனிப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார்.