Virat Kohli:  கோலியைத் தவிர வேறு யாராலும் அந்த சிஸ்சரை அடித்து இருக்க முடியாது. அப்படி வேறு யாராவது அடித்திருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பேன் என உலகக் கோப்பை இந்தியாவுடனான போட்டி குறித்து மனம் திறந்துள்ளார் பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப்.


நடந்து முடிந்த உலகக் கோப்பைத் டி20 கிரிக்கெட் தொடரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதுவும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது என்றாலே உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் விழி பிதுங்க, நகம் கடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அப்படி விறுவிறுப்புக்கி பஞ்சம் இல்லாததாக இந்த  போட்டியானது இருக்கும். 


அப்படி நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டித் தொடரில் லீக் சுற்றில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு போட்டியின் கடைசி பந்தில் இலக்கினை எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 






இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிரான 19 ஓவரை பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரவுஃப் வீசினார். இந்த ஓவரில் அடிக்கப்பட்ட இரண்டு சிக்ஸர்களும் கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. ஆமாம், ஹாரீஸ் ரவுஃப் வீசிய அதிவேகமான பந்தினை அவரது தலைக்கு மேல் சிக்ஸருக்கு அடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அதே ஓவரில் ஃபைன் லெக் திசையில் ஒரு சிக்ஸர் அடிக்கப்பட்டது. அதுவும் மிகவும் பிரமாண்டமான சிக்ஸராக அமைந்து. இந்த இரண்டு சிக்ஸர்களையும் ஐசிசி பெஸ்ட் சிக்ஸர் என்று புகழாரம் சூட்டியது. 



ஹாரிஸ் ரவுஃப்


 


இந்த சிக்ஸர்கள் குறித்து பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ் ரவுஃப் தற்போது மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது, “விராட் கோலியால் மட்டும் தான் இப்படியான தரமான ஷாட் அடிக்க முடியும்.  அவரைத் தவிர வேறு யாராலும் இப்படியான ஷாட் அடிக்க முடியாது. அவரைத் தவிர தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா போன்று வேறு யாராவது எனது பந்துவீச்சில் இப்படியான ஷாட் அடித்திருந்தால் மிகவும் வருத்தம் அடைந்திருப்பேன். அந்த உலகத்தரம் வாய்ந்த ஷாட் கோலியின் பேட்டில் இருந்து வந்தது. அதுதான் கோலிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்” என அவர் கூறினார். மேலும் 2018 -19 ஆண்டுகளில் சிட்னியில் நான் கிளப் கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டு இருந்தேன். அப்போது அங்கு இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடியபோது இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசியுள்ளேன். அப்போது கோலி, ராகுல், ரவிசாஷ்திரி ஆகியோரைச் சந்தித்து பேசியது உற்சாகமாக இருந்தது. போட்டி முடிந்த பின்னர் கோலி என்னை பாராட்டினார்” எனவும் அவர் கூறியுள்ளார்.