IND Vs AUS, Match Highlights:


உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி அதன் பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரில் ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி தொடரை வென்றுவிட்டது. 


இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலியா அணி அதிரடியாக பந்து வீசியதால், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிரடி வீரர்கள் எல்லாம் சொதப்ப, அணியில் இருந்த ஒரே சீனியர் வீரரான ஸ்ரேயஸ் ஐயர் மட்டும் பொறுப்புடன் ஆடினார். இவருக்கு ஜிதேஷ் சர்மா மற்றும் அக்சர் பட்டேல் ஓரளவிற்கு ஒத்துழைத்தனர். ஸ்ரேயஸ் ஐயர் பொறுப்பாக அரைசதம் விளாசினார். இதனால் இந்திய அணி ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை எட்டியது. அவர் 37 பந்தில் 53 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் சேர்த்தது.  


அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் வெற்றியை நோக்கி சீராக முன்னேறியது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 18 பந்தில் 28 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் வந்த பென் மெக் டெர்மட் தனது அதிரடி ஆட்டத்தினால் இந்திய வீரர்களுக்கு அச்சத்தினை உருவாக்கினார். ஒரு கட்டத்தில் அதிரடி பவுண்டரிகள் விளாசி அரைசதம் கடந்த அவர் தனது விக்கெட்டினை 37 பந்தில் 54 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன் பின்னர் போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரு அணி வீரர்களும் தங்களது வெற்றிக்காக போராடினர். போட்டியில்ன் 17வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது ஆஸ்திரேலியா அணிக்கு அழுத்தத்தை அதிகரித்தது. ஆனால் அதன்பின்னர் வந்த ஆவேஷ் கான் ஓவரில் ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி இந்திய பந்து வீச்சாளர்கள் மீது அழுத்தத்தை அதிகரித்தனர். 


கடைசி இரண்டு ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரினை வீசிய முகேஷ் முதல் பந்தில் மேத்யூ வைடை வீழ்த்த முயற்சி செய்தார். மிகவும் கடினமாக வந்த கேட்ச் வாய்ப்பினை ருத்ராஜ் தவறவிட்டார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை அரஷ்தீப் சிங் வீச மேத்யூ வைட் எதிர்கொண்டார். முதல் இரண்டு பந்துகள் டாட் ஆக வீச, மேத்யூ வைட் மீது பிரசர் விழுந்தது. மூன்றாவது பந்தினை சிக்ஸருக்கு விளாச முயற்சி செய்ய அது கேட்ச் ஆனது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.