இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரர்களில் ஒருவர் ரோகித் சர்மா. இவர் அண்மையில் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர் சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தலைமையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. 


 


இந்நிலையில் ரோகித் சர்மா அணியில் இல்லாத இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இதற்கு ஆதரவாக தரவுகளும் ஒன்றாக அமைந்துள்ளன. ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக ரோகித் சர்மா இல்லாமல் தென்னாப்பிரிக்கா,ஆஸ்திரேலியா,நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து மண்ணில் களமிறங்கிய போட்டிகளில் அதிக முறை தோல்வியையே சந்தித்துள்ளது. அதாவது இந்த நான்கு நாடுகளில் இந்திய அணி கடைசியாக ரோகித் சர்மா இல்லாமல் களமிறங்கிய 11 போட்டிகளில் 10ல் தோல்வி அடைந்துள்ளது. 




குறிப்பாக 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்பாக இந்த நான்கு நாடுகளில் ரோகித் சர்மா இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி 10 முறை தோல்வி அடைந்துள்ளது. அதேசமயம் இந்த நான்கு நாடுகளில் ரோகித் சர்மாவுடன் களமிறங்கிய கடைசி 10 போட்டிகளில்  இந்திய அணி 8ல் வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறார். குறிப்பாக 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 5 சதம் அடித்து அவருடைய முக்கியத்துவத்தை மீண்டும் நிரூபித்தார். இவை தவிர தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இந்திய அணிக்கு பல போட்டிகளில் இவர் நல்ல தொடக்கத்தை கொடுத்து வந்தார். இதனால் அவர் அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பலவீனமாகவே கருதப்படுகிறது. 


 


முன்னாள் கேப்டன் விராட் கோலியும் தற்போது சரியான பேட்டிங் ஃபார்மில் இல்லாததால் இந்திய அணி ரோகித் சர்மாவை மட்டுமே அதிகம் நம்பியுள்ளது. ஏற்கெனவே இந்திய அணியின் மிடில் ஆர்டர் 2019ஆம் ஆண்டு முதல் சொதப்பி வருகிறது. இதனால் இந்திய அணிக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக ரோகித் சர்மா, தவான்,ராகுல் மற்றும் கோலி ஆகிய நான்கு பேர் மட்டுமே டாப் ஆர்டரில் ரன்கள் எடுத்து வருகின்றனர். இவர்கள் சொதப்பும் பட்சத்தில் இந்திய அணி படு மோசமான தோல்விகளை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ஐபிஎல் அப்டேட்..! இதான் எங்க டீம் நேம்.. நச்சென பெயரை வெளியிட்ட லக்னோ..!