சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பது குறித்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சாக்லின் முஷ்டக் விளக்கமளித்துள்ளார்.


சச்சின் Vs கோலி


இந்தியாவில் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டு என்பதை தாண்டி அதனை ஒரு மதமாகவே அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் பரப்பிய பெருமை சச்சினையே சேரும். அதோடு, அந்த கிரிக்கெட் உலகின் கடவுளாகவும் சச்சின் வர்ணிக்கப்படுகிறார். சர்வதேச போட்டிகளில் 100 சதங்களை விளாசிய ஒரே வீரர் போன்ற எண்ணற்ற சாதனைகளை படைத்ததால் அவர் இந்த பெருமையை பெற்றுள்ளார். இதனிடையே, மாடர்ன் கிரிக்கெட்டின் மன்னராக இந்திய அணியின் நட்சத்திர வீரரான கோலி திகழ்ந்து வருகிறார். சச்சினின் பல்வேறு சாதனைகளையும் அவர் முறியடித்து வருகிறார். இதனால், சச்சின் மற்றும் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பது தொடர்பான விவாதம் அவ்வப்போது கிரிக்கெட் உலகில் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாக்லின் முஷ்டக் புதிய விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளார். 


யார் சிறந்த பேட்ஸ்மேன்:


நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ”சச்சின் டெண்டுல்கரை விட சிறந்த பேட்ஸ்மேன் யாரும் இல்லை என்பதை நான் மட்டுமல்ல முழு உலகமே ஒப்புக்கொள்ளும்.  கிரிக்கெட்டில் நீங்கள் எந்த ஷாட்டிற்கும் உதாரணம் கொடுக்க வேண்டும் என்றால், மக்கள் சச்சினின் ஷாட்களை தான் உதாரணம் காட்டுகிறார்கள். விராட் கோலி இன்றைய சகாப்தத்தின் ஜாம்பவான். ஆனால் சச்சின் மிகவும் கடினமான பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டார். அந்த சகாப்தத்தின் பந்துவீச்சாளர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள். கோஹ்லி வாசிம் அக்ரமை எதிர்கொண்டாரா? வால்ஷ், ஆம்ப்ரோஸ், மெக்ராத், ஷேன் வார்னே, முரளிதரன் ஆகியோரை எதிர்கொண்டாரா? இவர்கள் பெரிய வீரர்கள் மற்றும் அவர்கள் அனைவரும் மிகவும் புத்திசாலிகள். உங்களை எப்படி ட்ராப் செய்வது என்று அவர்களுக்குத் தெரியும். இன்று இரண்டு வகையான பந்து வீச்சாளர்கள் உள்ளனர் - ஒரு தரப்பினர் உங்களை தடுப்பர், மற்றொரு தரப்பினர் உங்களை சிக்க வைப்பர். ஆனால் சச்சின் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களுக்கு இரண்டுமே தெரியும்.  குறிப்பாக  பேட்ஸ்மேன்களை ட்ராப்  செய்வது நன்றாக தெரியும்” என சாக்லின் முஷ்டக் தெரிவித்துள்ளார்.


புதிய சாதனை படைப்பாரா கோலி?


சச்சினுக்கு அடுத்தபடியாக சர்வதேச போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீரர்களின் பட்டியலில், 75 சதங்களுடன் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.  ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசியாக அவர் விளையாடிய 7 இன்னிங்சில் 3 சதங்கள் விளாசியுள்ள கோலி ஒட்டுமொத்தத்தில் 46 சதங்கள் அடித்துள்ளார். இதனால், ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் சச்சினை சமன் செய்வதற்கு இன்னும் 3 சதங்களே தேவை. அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்தவரான சச்சினின் மற்றொரு சாதனையை (9 சதம்) சமன் செய்வதற்கு கோலிக்கு இன்னும் ஒரு சதம் தேவையாகும்.  இந்நிலையில் தான் ஆஸ்திரேலியவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது.