டெல்லி அணிக்காக கடந்த ரஞ்சி டிராபியில் அதிக ரன் குவித்த துருவ் ஷோரே மற்றும் உள்நாட்டு டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் நிதிஷ் ராணா ஆகியோர் இனி டெல்லி அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடபோவதில்லை என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி அணியிலிருந்து விலக போகும் இவர்கள், வரும் உள்நாட்டு சீசனில் இருந்து விதர்பா அணிக்காக விளையாட போவதாக தெரிய வந்துள்ளது. 


இதற்காக, இவர்கள் இரண்டு பேரும் மற்றொரு மாநிலத்திற்காக விளையாட டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்திட தடையில்லா சான்றிதழை பெற அப்ளை செய்துள்ளனர். இதுகுறித்து டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளர் ராஜன் மஞ்சந்தா, இரு கிரிக்கெட் வீரர்களிடமும் பேசப்படும். அவர்கள் ஏன் அத்தகைய முடிவை எடுக்க விரும்புகிறார்கள் என்பதை கண்டறியவும், அவர்களின் குறைகளை பொறுமையாக கேட்க இருக்கிறோம். அவர்கள் அதன்பிறகு முடிவை மாற்றவில்லை என்றால், என்.ஓ.சி வழங்கப்படும் என்றார். 


இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு மன்சந்தா, “ ஆம், துருவ் மற்றும் நிதிஷ் இருவரும் டெல்லி கிரிக்கெட் அணியை விட்டு வெளியேற விரும்புவது, என்.ஓ.சியை நாடியதும் உண்மைதான். இருவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்பதாலும், டெல்லி கிரிக்கெட்டுக்கு நிறைய சேவை செய்தவர்கள் என்பதாலும் அவர்களை தொடருமாறு நாங்கள் கண்டிப்பாக கேட்டுக்கொள்கிறோம். இந்த விஷயத்தில் இறுதி முடிவு அவர்களது. எங்களுடன் உடன்படவில்லை என்றால் கண்டிப்பாக என்.ஓ.சி கொடுப்போம்.”என்றார்.


டெல்லி டிரஸ்ஸின்ஃப் ரூமில் சில வீரர்களுடன் நிதிஷ் ராணாவுக்கு பிரச்சனைகள் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் ஆல்-ரவுண்டர் ஹிருத்தில் ஷோக்கீனும், நிதிஷ் ராணாவிற்கு மிகப்பெரியளவில் மனக்கசப்பு இருந்துள்ளது. அதேபோல், கடந்த ரஞ்சி சீசனில் ஷோரே 859 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் 4வது இடத்தில் இருந்தார். இவருக்கு முன்னதாக மயங்க் அகர்வால் 990 ரன்களுடன் முதலிடத்திலும், அர்பித் வஸ்வதா 907 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தனர். அனுஸ்திப் மஜூம்தார் 867 ரன்களுடன் மூன்றாம் இடம் பிடித்தார். 


முன்னதாக டிடிசிஏ இயக்குனர் ஒருவர் தெரிவிக்கையில், “ சிவப்பு பந்து அணியில் இருந்து நீக்கப்பட்டும், வெள்ளை பந்து வடிவத்தில் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதாலும் நிதிஷ் ராணா வருத்தமடைந்தார். அதேபோல், கடந்த சீசனி தேர்வாளர்கள் அவரை சிவப்பு பந்து ஸ்பெஷலிஸ்ட் என்று கூறியதால் ஷோரே வருத்தமடைந்தார். அதனால்தான் இவர்கள் இருவரும் டெல்லி அணியில் இருந்து, வேறு மாநில அணிகளுக்கு விளையாட இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். 


இந்த சீசனில் ரஞ்சி டிராபியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹிம்மத் சிங் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், யாஷ் துல்க்கு கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கப்பட்டது அவசரமாக எடுக்கப்பட்டது. யஷ் துல் இதுவரை ஒரே ஒரு முதல்தர போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். மேலும், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக அபய் சர்மா நீடிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிய வந்துள்ளது.