இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சமூக வலைதளங்களில் வெளியிடும் பதிவுகள் மூலம் ஈட்டும் வருமானம் என்று ஒரு சில நாட்களாக பரவி வரும் செய்திகள் உண்மையல்ல என்று மறுத்துள்ளார். 


இன்ஸ்டாகிராமில் கோலி ஈட்டும் வருமானம்


ஒரு தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவுக்கு கோஹ்லி 14 கோடி ரூபாய் வரை கேட்கிறார் என்று சமீபத்தில் ஊடகங்களில் வந்த கட்டுரைகளுக்கு கோலி பதிலளித்துள்ளார். ஹாப்பர் ஹெச் கியூ என்ற நிறுவனம் வெளியிட்ட தக்வல்கள் என்று கூறப்பட்டு வைராலான செய்திகளில் இந்த தகவல் தீயாக பரவியது. அதில் உலக அளவில் ஒரு பதிவுக்கு அதிக பணம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை மூன்றாவது இடத்தில் இருந்தார். முதல் இடத்தில் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ இருப்பதாக அந்த அறிக்கை கூறியது. அவர் 26.7 கோடி ரூபாய் வாங்குவதாக கூறப்பட்டிருந்தது. அடுத்ததாக மெஸ்ஸி 21.5 கோடி ரூபாய் வாங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களுக்கு அடுத்தது விராட் கோலியின் பெயர் இருந்தது. அவர் 11.45 கோடி ரூபாய் வாங்குவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.



பட்டியலில் உள்ள மற்றவர்கள்


அதோடு இந்திய பிரபலங்களில் அதிகம் ஈட்டும் நபராக விராட் கோலி குறிப்பிடப்பட்டிருந்தார். அதே பட்டியலில் 29-வது இடத்தில் பிரியங்கா சோப்ரா இருந்தார். அவர் ஒரு பதிவிற்கு 4.4 கோடி ரூபாய் வாங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. உலக அளவில் ரெஸ்ட்லிங் வீரராக இருந்து நடிகராக மாறிய வெய்ன் ஜான்சன், கால்பந்து பிரபலம் நெய்மர் ஆகியோரும் அந்த பட்டியலில் இருந்தனர். ஆனால் தற்போது விராட் கோலி அந்த தகவலை மறுத்திருப்பது ஒட்டுமொத்த பட்டியலின் உண்மைத்தன்மையையும் சந்தேகத்திற்கு உட்படுத்தி உள்ளது.  


தொடர்புடைய செய்திகள்: IND Vs WI 4th T20: தொடரை வெல்லுமா மேற்கிந்திய தீவுகள்..? சவால் அளிக்குமா இந்தியா..? இன்று 4வது டி20 மோதல்..!


செய்தியை மறுத்த கோலி


இன்று (சனிக்கிழமை) காலை ட்விட்டரில், விராட் கோலி தனது சமூக ஊடக வருவாயை உண்மையல்ல என்று கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். X எனப்படும் டிவிட்டரில் அவர் பதிவிட்ட ஒரு போஸ்டில், "வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நான் நன்றியுள்ளவனாகவும் கடமைப்பட்டவனாகவும் இருக்கிறேன், ஆனால் எனது சமூக ஊடக வருவாய் குறித்து சுற்றி வரும் செய்திகள் உண்மையல்ல" என்று எழுதினார்.






ஹாப்பர் ஹெச் க்யூ பட்டியல்


ஹாப்பர்ஹெச்க்யூ வெளியிட்ட அதன் 2023 இன் இன்ஸ்டாகிராம் பணக்காரர் பட்டியலில் ஒட்டுமொத்தமாக கோலி 14-வது இடத்தில் இருந்தார். விளையாட்டு வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார். அமெரிக்க பிரபலங்களான செலினா கோம்ஸ், கைலி ஜென்னர், அரியானா கிராண்டே, கிம் கர்தாஷியன், பியோனஸ் நோல்ஸ், க்ளோ கர்தாஷியன் மற்றும் ஜஸ்டின் பெய்பர் ஆகியோர் அந்த பட்டியலில் பிடித்துள்ளனர்.