Manmohan Singh Death: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கை, உரிய இடத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது. 


மன்மோகன் சிங்கிற்கு இன்று இறுதிச்சடங்கு:


இந்திய நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையை எட்ட முக்கிய பங்கு வகித்த, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வியாழனன்று இரவு வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இன்று அவரது உடல் யமுனை நதிக்கரையில் தகனம் செய்யப்பட உள்ளது. 



இறுதிச்சடங்கு எங்கு? எப்போது? நடைபெறும்


மன்மோகன் சிங்கின் உடலுக்கான இறுதிச்சடங்கு, முழு அரசு மரியாதையுடன் இன்று காலை 11.45 மணிக்கு, யமுனை ஆற்றங்கரையான நிகம்போத் கட்டில் நடைபெறும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.


காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடல்:


இதையடுத்து இன்று காலை மன்மோகன் சிங்கின் உடல் காங்கிரஸ் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.தொடர்ந்து, காலை 9.30 மணியளவில் இறுதி ஊர்வலம் தொடங்கி, 11.45 மணியளவில் மன்மோகன் சிங்கின் உடல் தகவ்னம் செய்யப்பட உள்ளது.


இடமளிக்காத மத்திய அரசு


மன்மோகன் சிங்கின் உடலுக்கான இறுதிச் சடங்குகள் மற்றும் தகனத்தை பொருத்தமான எதிர்காலத்தில் நினைவிடம் கட்டப்படும்,  இடத்தில் செய்ய வேண்டும் என்ற மன்மோகன் சிங்கின் குடும்பத்தினரின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக ஷிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் குற்றம்சாட்டியுள்ளார்.


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை, சிங்கின் இறுதிச் சடங்குகளை பின்னர் நினைவிடம் கட்டக்கூடிய இடத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மன்மோகன் சிங் போன்ற அந்தஸ்துள்ள ஒரு தலைவருக்கும், முன்னாள் பிரதமர்களின் கடந்தகால மரபுகளுக்கு ஏற்றவாறும் இது ஒரு பொருத்தமான அஞ்சலியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ““நாட்டின் அரசு தலைவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடங்களிலேயே மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்குகள் நடைபெற வேண்டும்” என கார்கே வலியுறுத்தியுள்ளார். ஆனால், இது குறித்து அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.


வரலாற்றுச் சிறப்புமிக்க நிதியமைச்சராகவும், இன்றைய இந்தியாவின் நிலைக்கு அன்றே வித்திட்ட பிரதமராகவும் திகழ்ந்த மன்மோகன் சிங்கிற்கு மத்திய அரசு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.