வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த நிகோலஸ் பூரன், அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இரண்டு முறை (2012, 2016) டி20 உலகக் கோப்பை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறியது.
ஒரு காலத்தில் ஜாம்பவனாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த முறை சூப்பர் 12 சுற்றுக்கு வராமல் போனது அந்நாட்டு ரசிகர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்காக நான் தொடர்ந்து விளையாடுவேன் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். எனது அணிக்கு ஒரு சீனியர் பிளேயராக பங்களிப்பை தொடர்ந்து அளிப்பேன். நான் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகலாம் என முடிவு செய்தது எனது அணியின் நலனுக்காகத்தான். என்னைப் பொறுத்தவரை ஒரு வீரராக நான் எனது அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நான் தீவிரமாக விரும்புகிறேன். மேலும் முக்கியமான நேரங்களில் தொடர்ந்து ரன்களை குவிப்பதில் முழு கவனம் செலுத்துவதே அணிக்கு நான் கொடுக்கக்கூடிய அதிக மதிப்பு ஆகும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 4-1 என்ற கணக்கில் பூரன் தலைமையிலான அணி கைப்பற்றியது. பொல்லார்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த பிறகு, இந்த ஆண்டு மே மாதம் தான் பூரன் அதிகாரப்பூர்வமாக டி20 அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
Joe Root : டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்?: ஜோ ரூட் விளக்கம்
இடது கை பேட்ஸ்மேனான பூரன், 17 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டிலும், 23 டி20 கிரிக்கெட் ஆட்டங்களிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வழிநடத்தியுள்ளார்.
முன்னதாக, டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் ரிக்கி ஸ்கெரிட், அணியில் மாற்றங்களை புகுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.