விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அருணாச்சல பிரதேச அணியை 435 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வென்றுள்ளது.


லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை தமிழ்நாடு வீரர் நாராயண் ஜெகதீசன் படைத்துள்ளார். 


நாட்டின் பல்வேறு நகரங்களில் விஜய் ஹசாரே நடைபெற்று வருகிறது. இதில், குரூப் சி பிரிவில் அருணாசல், தமிழ்நாடு இடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் 6ஆவது சுற்று கிரிக்கெட் ஆட்டம் இன்று நடைபெற்றது.


இதில், தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தமிழ்நாடு அணி ஜெகதீசனின் அபார இரட்டை சதம் மற்றும் சுதர்சனின் அபார சதத்தின் உதவியால் 506 ரன்களை குவித்தது.


இதையடுத்து, 507 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்குடன் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்தடுத்து வந்த வீரர்கள் டக் அவுட்டாகியும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இதனால், அருணாச்சல பிரதேச அணி 28.4 ஓவர்களில்71 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அருணாச்சல பிரதேச அணியில் 4 பேர் "டக்" அவுட்டாகினர். இதனால், தமிழ்நாடு அணி 435 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.


இது குரூப் பிரிவு ஆட்டம் தான் என்றாலும் ரசிகர்களிடம் இருந்து தமிழக அணிக்கும், அந்த அணியின் வீரர் ஜெகதீசனுக்கும் பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.


50 ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிதான் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. அந்த சாதனையை தமிழ்நாடு அணி விஜய் ஹாசரே போட்டியில் முறியடித்துள்ளது. இங்கிலாந்து அணி நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 498 ரன்கள் குவித்ததே ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோராக இருந்து வருகிறது.


தொடர்ச்சியாக 5 சதங்களைப் பதிவு செய்ததன் மூலம், கிரிக்கெட்டில் புதிய சாதனையையும் ஜெகதீசன் படைத்துள்ளார். சக நாட்டு வீரர்கள் எந்தவொரு சாதனையை படைத்தாலும் உடனடியாக சமூக வலைத்தளங்களில் சீனியர் வீரர்கள் பாராட்டு மழை பொழியத் தொடங்கி விடுவார்கள்.
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் ஜெகதீசனை வாழ்த்து ட்வீட் வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஜெகதீசன் சிறப்பாக விளையாடியுள்ளார். அவரது முயற்சிக்கு பாராட்டுகள். என்ன ஓர் அற்புதமான முயற்சி. இதை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சாய் சுதர்சனும் சிறப்பாக விளையாடியுள்ளார்.
இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம்புகுந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இருவருக்கும் வாழ்த்துகள் என்று அந்த ட்வீட்டில் பதிவு வெளியிட்டுள்ளார் தினேஷ் கார்த்திக்.






அதேநேரம், மற்றொரு ட்வீட்டில் அவர் விஜய் ஹசாரே போட்டியை நடத்தும் நிர்வாகத்தையும் விமர்சித்துள்ளார்.


அந்தப் பதிவில் அவர், "இன்னொரு பக்கம் பார்த்தால், இதுபோன்ற தொடரில் எலைட் டீமாக இருக்கும் தமிழகத்துடன் வடகிழக்கு மாநிலங்களை விளையாட வைப்பது சரியாக இருக்குமா? என்று தெரியவில்லை. 
இது அணிகளின் ரன் விகிதத்தை வைத்து பார்க்கும்போது, இந்த அணிகளில் ஏதாவது ஒன்றிற்கு எதிரான  போட்டியில் மழை பெய்தால் என்ன ஆகும் என்று கற்பனை செய்து பாருங்கள்! வடகிழக்கு அணிகளை ஒரு தனி குழுவில் வைத்து தகுதிச்சுற்று நடத்தி எடுக்க முடியாதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.






விஜய் ஹசாரே
விஜய் ஹசாரே போட்டி இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் போட்டி தொடர் ஆகும். இந்தப் போட்டித் தொடரில் 38 அணிகள் விளையாடுகின்றன. 5 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வடகிழக்கு அணிகள் இடம்பிடித்துள்ளன.  அந்த அணிகளில் ஒன்று கூட இதுவரை குழு ஆட்டங்களில் ஜெயிக்கவில்லை.