இந்திய நேரப்படி, இன்று மதியம் 1.30 மணிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி தொடங்கியது.சிட்னியில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில், முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.
நியூசிலாந்து பேட்டிங்:
முதல் ஓவரை வீசிய மஹேஷ் தீக்ஷவின் பந்தை எதிர்கொண்ட ஃபின் ஆலன் 0.4 ஓவர்களில் ஒரு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கான்வே மற்றும் கேன் வில்லியம்சனும் ஆட்டமிழந்ததையடுத்து, நான்காவது ஓவரின் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 15 எடுத்து முற்றிலும் சிக்கலுக்கு உள்ளானது.
பிலிப்ஸ் சதம்
பின்னர் அடுத்ததாக களமிறங்கிய கிளன் பிலிப்ஸ் அதிரடியாக ஆடி நியூசிலாந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். அவர் 64 பந்துகளில், 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்து 104 ரன்கள் எடுத்து அசத்தினார். குமாரா வீசிய பந்தில் அடித்த பிலிப்ஸ் சனாக்காவிடம் கேட்ச்சை கொடுத்து அவுட்டானார்.
அதையடுத்து, நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.
இலங்கை பேட்டிங்:
அடுத்ததாக பேட்டிங் செய்த இலங்கை அணி, ஆரம்ப முதலே தடுமாறியது. முதல் 2 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து தடுமாறியது. அதையடுத்து, 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது.
இலங்கை தோல்வி:
பின்னர் 19.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இலங்கை அணியில், அதிகபட்சமாக சனகா 32 பந்துகளில் 35 ரன்களும், பனுகா ராஜபக்ச 22 பந்துகளில் 34 ரன்களும் எடுத்தனர்.