டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இம்முறை பலம் வாய்ந்த அணிகளை கத்துக்குட்டி அணிகள் தொடர்ந்து தோற்கடித்து வருகின்றன. அந்தவகையில் இம்முறை பாகிஸ்தான் ஜிம்பாவே அணியிடமும், இங்கிலாந்து அயர்லாந்து அணியிடமும் தோல்வி அடைந்துள்ளன. ஒவ்வொரு டி20 உலகக் கோப்பை தொடர்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பலம் வாய்ந்த அணிகளை கத்துக்குட்டி அணிகள் திணற விட்ட போட்டிகள் என்னென்ன?
ஜிம்பாவே vs ஆஸ்திரேலியா (2007):
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா- ஜிம்பாவே அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி ஜிம்பாவேயின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஆஸ்திரேலியா அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ஜிம்பாவே அணி பிரண்டன் டெய்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்து அசத்தினார்.கடைசி ஓவரில் ஜிம்பாவே வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. ஜிம்பாவே அணி அசத்தலாக எடுத்து வெற்றி பெற்றது.
நெதர்லாந்து vs இங்கிலாந்து (2009):
2009ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து முதல் முறையாக களமிறங்கியது. அப்போது தன்னுடைய முதல் போட்டியில் நெதர்லாந்து அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டது. எனினும் சிறப்பாக விளையாடிய நெதர்லாந்து அணி இங்கிலாந்து அடித்த 162 ரன்களை சேஸ் செய்து அசத்தல் வெற்றி பெற்றது.
நெதர்லாந்து vs இங்கிலாந்து (2014):
2014 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரிலும் இங்கிலாந்து-நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 2009 உலகக் கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்து பழி வாங்கும் என்று எதிர்பார்கப்பட்டது. எனினும் இந்த முறையும் நெதர்லாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து அணி 88 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து படு தோல்வி அடைந்தது.
அயர்லாந்து vs இங்கிலாந்து (2022):
நடப்பு உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் அயர்லாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய அயர்லாந்து அணி 156 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 157 ரன்களை செஸ் செய்தது. அப்போது வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. டிஎல் முறைப்படி 5 ரன்கள் பின் தங்கியிருந்தது. இதன்காரணமாக அயர்லாந்து அணி போட்டியை வென்றது. இங்கிலாந்து அணி தொடர்ந்து டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வி அடையும் நிலை தொடர்ந்து வருகிறது.
ஜிம்பாவே vs பாகிஸ்தான் (2022):
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாவே அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஜிம்பாவே அணி 130 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி சிகந்தர் ராசாவின் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் திணறியது. இதன்காரணமாக இந்தப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.