பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் வழக்கமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் விராட் கோலி. கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியான ஃபார்மில் இல்லாமல் கோலி தவித்து வந்தார். அணியில் அவரின் இடம் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் விமர்சனம் செய்து வந்தனர். அவை அனைத்திற்கும் கோலி தனது ஆட்டத்தினால் தற்போது பதில் அளித்து வருகிறார்.


பாகிஸ்தான் அணிக்கு எதிராக 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் மற்ற வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.


இதை தொடர்ந்து, யார் எல்லாம் விமர்சித்தார்களோ அவர்கள் அனைவரும் கோலிக்கு புகழாரம் சூட்டினர். இந்நிலையில், கோலி யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.


 






நேற்று, கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்தில் (KSCA) நடந்த பாராட்டு விழாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பி.சி.சி.ஐ. தலைவர் பின்னி பேசியதாவது, டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை விளையாடியதற்காக கோலிக்கு வாழ்த்து தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு அது ஒரு கனவு போல இருந்தது. கோலி, மைதானத்தில் பந்தை அடித்த விதத்தை உணரவே முடியவில்லை. இது ஒரு அற்புதமான வெற்றி. இதுபோன்ற போட்டிகளை பார்த்ததே இல்லை. போட்டியின் பெரும்பாலான கட்டத்தில் ஆட்டம் பாகிஸ்தானுக்கு சாதகமாகவே இருந்தது. திடீரென்று அது இந்தியாவின் பக்கம் திரும்பியது. மக்கள் எதை பார்க்க விரும்புகிறார்களோ அதுபோல போட்டி மாறியது சிறப்பு.


கோலி தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு கிளாஸான வீரர். அவரைப் போன்ற வீரர்கள் அழுத்தமான சூழ்நிலைகளில் வளர்கிறார்கள். அழுத்தமான சூழல், அவரிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது" என்றார்.


வியாழன் அன்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சார்பில் கோலி அதிக ரன்களை எடுத்திருந்தார். 44 பந்துகளில் 62 ரன்களை கோலி குவிக்க, நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. நாளை பெர்த் மைதானத்தில் நடக்கும் சூப்பர் 12 (குரூப் 2) சுற்றில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.