தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் நியூசிலாந்து அணி ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.


தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து இறுதிப் போட்டி:


மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒன்பதாவது சீசன் கடந்த 3-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் மோதின. அணிகள் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியிலும் 5 அணிகள் இடம்பெற்றன.லீக் சுற்றுகளின் முடிவில் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் 2 இடங்களை பிடித்ததன் அடிப்படையில் அவை அரையிறுதிக்கு முன்னேறின.


மற்ற அணிகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் தொடரிலிருந்து வெளியேறியது. பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்காவும், வெஸ்ட் இண்டீசை நியூசிலாந்து அணியும் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. 


புது வரலாறு படைத்த நியூசிலாந்து அணி:


இந்நிலையில், துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்டோபர் 20) இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதனிடையே, நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது நியூசிலாந்து அணி. அதிகபட்சமாக நியூசிலாந்து அணி சார்பில் அமெலியா கெர் 43 ரன்களும், ப்ரூக் ஹாலிடே38 ரன்களும் விளாசினார்கள். சூஸி பேட்ஸ் 32 ரன்கள் எடுத்தார்.


தென்னாப்பிரிக்கா தரப்பில் நன்குலுலேகோ மிலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அயபோங்கா காஹா, ச்லோ டிரையான் மற்றும் நாடைன் டி கிளர்க் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் ப்ரிட்ஸ் களம் இறங்கினார்கள்.


இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த வகையில் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.