கடந்த 36 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து வெற்றி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேசியுள்ளார்.


நியூசிலாந்து அணி வெற்றி:


நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த ஆட்டத்தின் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 402 ரன்களை குவித்தது.இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் சர்பராஸ் கானின் சதத்துடன் இந்திய அணி 462 ரன்களை எடுக்க, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கியது நியூசிலாந்து அணி. அதன்படி ஐந்தாம் நாள் ஆட்டமான இன்று அந்த இலக்கை எளிமையாக எட்டிய நியூசிலாந்து அணி தங்களது வெற்றி பதிவு செய்தது.


நல்ல வேலையாக நாங்கள் டாஸ் தோற்று விட்டோம்:


இந்த வெற்றியின் மூலம் கடந்த 36 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து வெற்றி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,"இந்தியா செய்தது போல டாஸ் ஜெயித்திருந்தால் நாங்களும் பேட்டிங் செய்திருப்போம். நல்ல வேலையாக நாங்கள் டாஸ் தோற்று விட்டோம். நாங்கள் பந்தை சரியான இடங்களில் வைத்து நல்ல பலனை பெற்றோம்.


போட்டியின் முதல் இரண்டு இன்னிங்ஸ் எங்களுக்கு ஆட்டத்தை நல்ல முறையில் அமைத்துக் கொடுத்தது. இதற்கு அடுத்து இந்தியா எங்களிடம் திரும்பும் என்று தெரியும். ஆனால் அப்பொழுது இரண்டாவது புதிய பந்தில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு மடக்கினார்கள்.


இந்த போட்டியில் சமநிலையில் இருந்த பொழுது ரச்சின் ரவீந்தரா மற்றும் சவுதி அமைத்த பார்ட்னர்ஷிப் எங்களை போட்டிக்கு முன்னணியில் கொண்டு வந்தது. மேலும் இந்த போட்டியில் வெறும் நூறு ரன்களை மட்டுமே துரத்துவது மகிழ்ச்சியாக இருந்தது.  ரூர்க் வேகப் பந்துவீச்சில் பவுன்ஸ், வேகம், பந்தை காற்றில் நகர்த்துவது என சிறப்பாக இருந்தார்.


ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு பதட்டம் இருந்தது:


அவருக்கு மூத்த பந்துவீச்சாளர்கள் ஹென்றி மற்றும் சவுதி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். சவுதி பந்து வீசிய விதம் எங்களுக்கு நல்ல தொனியை அமைத்துக் கொடுத்தது. மேலும் அவருடைய பேட்டிங் திறமை பற்றி நாங்கள் அறிவோம். இளைஞன் ரச்சின் ரவீந்தரா சில காலத்திற்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வந்து ஒரு புதிய பாத்திரத்தை ஏற்று, அதில் அவர் தன்னை மிகச் சிறப்பாக நிரூபித்து விளையாடி கொண்டு வருகிறார்.


மிகக்குறிப்பாக இன்று நாங்கள் குறைந்த இலக்கை மட்டுமே துரத்திக் கொண்டு இருந்தாலும் கூட, எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு பதட்டம் இருந்தது. ஆனால் ரச்சின் ரவீந்தரா பேட்டிங் செய்த விதத்தால் எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த பதட்டம் அப்படியே போய்விட்டது"என்று கூறியுள்ளார்  நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம்.