NZ vs Ban World Cup 2023: சென்னையில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின்  11வது லீக் போட்டியில், நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


உலகக் கோப்பை:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், தற்போது வரை 10 லீக்  போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தோல்வியையே சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோத உள்ளன.


நியூசிலாந்து - வங்கதேசம் மோதல்:


சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, இன்றைய போட்டியிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய முனைப்பு காட்டுகிறது.


அதேநேரம், கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் தோல்வியுற்ற வங்கதேசம் அணி, இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என கருதப்படுகிறது.


பலம் & பலவீனங்கள்:


நியூசிலாந்து அணியின் முன்கள வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதோடு, தொடர்ச்சியாக ரன் குவித்தும் வருகின்றனர். நடுகள வீரரக்ளும் அவருக்கு உறுதுணையாக இருக்க, இந்திய மைதானங்களை கணித்து பந்துவீச்சிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பீல்டிங்கிலும் அந்த அணி தரமாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் வங்கதேச அணியின் டாப் ஆர்டர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சும் பெரிதாக எடுபடாதது பின்னடைவாக உள்ளது. 


நேருக்கு நேர்:


இரு அணிகளும் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 41 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் வங்கதேசம் அணி 10 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 30 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. 


மைதானம் எப்படி?


சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என அனைவரும் அறிந்ததே. இன்றைய போட்டியிலும் அந்த தாக்கத்தை உணரலாம். இரண்டு அணிகளிலும் ஷகிப் அல் ஹசன் மற்றும் சாண்ட்னர் போன்ற அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது, இன்றைய போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உத்தேச அணி விவரங்கள்:


நியூசிலாந்து:


டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட்


வங்கதேசம்:


தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்