உலகக்கோப்பை டி20 போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு நாட்டு அணிகளும் தங்களது நாட்டு அணிகளை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில், டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பைக்கான நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற வீரர்கள் விவரம் பின்வருமாறு :
டிம் சவுத்தி, இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்ட்டின் கப்டில், லாச்லன் பெர்குசன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், டிரென்ட் போல்ட், ஃபின் ஆலன்.
கடந்த 2021 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இடம்பெற்றிருந்த பிளாக் கேப்ஸ் அணியில் மூன்று மாற்றங்களைச் செய்துள்ளனர் - கைல் ஜேமிசன், டோட் ஆஸ்டில் மற்றும் டிம் சீஃபர்ட் ஆகியோருக்குப் பதிலாக லாக்கி பெர்குசன், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் ஃபின் ஆலன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை மூன்றாவது முறையாக கேன் வில்லியம்சன் வழிநடத்த உள்ளார். போல்ட், பெர்குசன், டிம் சவுத்தி மற்றும் ஆடம் மில்னே ஆகியோரைக் கொண்ட நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மின்னல் வேக தாக்குதலை எதிரணிகளுக்கு வழங்கும். அதேபோல், இஷ் சோதியுடன் பிரேஸ்வெல் மற்றும் மிட்செல் சான்ட்னர் சுழற்பந்து வீச்சுக்கு பங்களிப்பு கொடுக்கலாம்.
மேலும், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், சான்ட்னர், பிரேஸ்வெல் மற்றும் நீஷம் ஆகியோர் ஆல்-ரவுண்டர்களாக நியூசிலாந்து அணிக்கு பலமாக உள்ளனர். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய டெவோன் கான்வே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்குகிறார். அக்டோபர் 7-ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷுடனான டி20 முத்தரப்பு தொடரில் நியூசிலாந்து அணி விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கு பிறகு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி பங்கேற்கும்.