உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு கிரிக்கெட் வீரர் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன். இவர் முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு ஃபர்ஸ்ட்-கிளாஸ் கிரிக்கெட் தொடரின் மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி 2008 ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான  உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி 2010 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக விளையாட தேர்வானார்.


இதுவரை 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 42 அரைசதங்களையும் 13 சதங்களையும் அடித்து அசத்தியுள்ளார், அதுமட்டுமின்றி 94 டெஸ்ட் போட்டிகளில் 33 அரைசதங்களையும் 28 சதங்களையும் எடுத்து நியூசிலாந்து அணியில் ஒரு தவிர்க்க முடியாத வீரராக தற்போது வரை விளங்குகிறார். 




கேப்டன் ஆன கதை


2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் வில்லியம்சன் மூழு நேர நியூசிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அதன் பின்னரே நியூசிலாந்து அணியின் அசுர வளர்ச்சியை அனைவராலும் கண்கூட பார்க்க முடிந்தது. 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தாலும், 10 ஆட்டங்களில் 578 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதை பெற்றார் வில்லியம்சன். பின்னர் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 2021 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக் சாம்பியன் டெஸ்ட் போட்டியையும் வென்று முதல் டெஸ்ட் சாம்பியன் என்ற பெருமைக்கு சொந்தமானது.


வில்லியம்சன் காயம்  


கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி தொடங்கப்பட்ட 16வது ஐபிஎல் தொடரியின் தொடக்க ஆட்டத்திலேயே எல்லை கோட்டுக்கு அருகே பந்தை துள்ளி குதித்து தடுக்க முயன்ற போது கீழே விழுந்ததால், வில்லியம்சனின் வலது முழங்காலில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. காயம் பலமாக இருந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார் வில்லியம்சன். இதனால் வருகின்ற அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் உலகக் கோப்பை போட்டியில் இவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.




வில்லியம்சன் அளித்த பேட்டி


இது குறித்து வில்லியன்சன் நேற்று அளித்த பேட்டியில், “உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது என்பது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. உடலை தேற்றுவதற்காக பிசியோ, பயிற்சி உதவியாளர்கள் வகுத்துள்ள திட்டத்தை பின்பற்றி  பயிற்சி மேற்கொள்கிறேன். தற்போதைய சூழலில் நான் உலகக் கோப்பையில் பங்கேற்க வாய்ப்பு குறைவுதான். காயத்தில் இருந்து மீண்டு உலகக் கோப்பையில் பங்கேற்பது என்பது உண்மையிலே கடினமான இலக்கு, என்றாலும் உலகக் கோப்பையில் ஆட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உந்து சக்தியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.


வில்வியம்சனின் இந்த பேட்டி நியூசிலாந்து அணியின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி வில்லியம்சன் ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் வில்லியம்சன் விரைவில் குணமடைய வேண்டும் என ஆவலில் உள்ளனர்.