Asian Games 2023: இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளது. ஆசிய விளையாட்டில் இதுவரை எந்த இந்தியரும் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்றதில்லை என்ற மோசமான சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. 2018 பதிப்பில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றத தான் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் சிறந்த முடிவாக இருந்தது. 






இந்நிலையில், அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக உலக நம்பர் 1 ஜோடியாக மகுடம் சூடவுள்ள சாத்விக் மற்றும் சிராக் ஜோடி, தென்கொரியாவின் சோய் சோல்கியு மற்றும் கிம் வோன்ஹோ ஆகியோரை வீழ்த்தி பேட்மிண்டனில் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.  சாத்விக் மற்றும் சிராக் ஜோடி 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.


சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் ஆசியாவில் பாட்மிண்டனில் இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தைப் பெறுவதற்கு முன்பு, பல விளையாட்டு கான்டினென்டல் நிகழ்வின் 61 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இந்தியா இரண்டு வெள்ளிப் பதக்கங்களை மட்டுமே பெற்றிருந்தது. கடைசியாக பேட்மிண்டனில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தா-பாலம்பேங்கில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து இந்தியாவிற்கான முதல் வெள்ளி பதக்கத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


தொடக்கம் முதலே விறுவிறுப்பான போட்டி: 


ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக தொடங்கி ஒரு போரை போல் காட்சியளித்தது. இடைவேளையின் போது சோல்கியூ மற்றும் வோன்ஹோ 11-9 என முன்னிலை பெற்றனர். ரங்கி ரெட்டியும், ஷெட்டியும் 15-18 என்ற பின்னடைவுடன் முதல் ஆட்டத்தில் தோல்வியை எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர். ஆனால் பின்னர், இந்திய ஜோடி தொடர்ந்து ஆறு புள்ளிகளைப் பெற்று 29 நிமிடங்களில் 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.






இரண்டாவது கேமில் ரங்கிரெட்டி மற்றும் ஷெட்டியின் வேகம் தொடர்ந்தது. இரண்டாவது இடைவேளையின் போது அவர்கள் 11-7 என முன்னிலை பெற்றனர். சோல்கியூ மற்றும் வோன்ஹோ இறுதிப் போட்டிக்கு கடைசியாக மீண்டும் வர முயன்றனர், ஆனால் இந்திய ஜோடி 27 நிமிடங்களில் 21-16 என்ற கணக்கில் இரண்டாவது கேமை எடுத்து, ஆசிய விளையாட்டு 2023 இல் பேட்மிண்டனில் சரித்திரம் படைத்தது.