ஹர்திக் பாண்டியா, ஆல்ரவுண்டராக அறியப்படும் இவர் தான் ஏன் கிரிக்கெட் விளையாட வந்தேன் என்பது குறித்து மிகவும் சுவாரஸ்யமான அதே வேளையில் மனம் திறந்த பளிச் பேட்டியை அளித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு தான் ஹர்திக் பாண்டியா தனது முதல் சர்வதேசப் போட்டியை விளையாடினார். அன்று தொட்டு இப்போது வரை அவர் டெஸ்ட் மேட்ச், ஒன் டே, டி20 என அனைத்து விளையாட்டுகளிலும் விளையாடி வருகிறார். 


இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராகவும், ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் ஹர்திக் பாண்டியா சமீபத்திய ஐபிஎல் போட்டிக்காக ரூ.11 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.


2014 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலப் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு அடிப்படை விலையாக 10 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அவரை எந்த அணியும் ஏலம் எடுக்காததால் விலைபோகாத வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றார். ஆனால், நடந்து முடிந்த சீசனில் அவர் ரூ.11 கோடிகு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.


2021 ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக வரை,  மும்பை அணிக்காக 80 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா 1349 ரன்களையும், 42 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் அவர் மனம் திறந்த பேட்டியொன்று அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் விவரம் வருமாறு:


நானும் எனது சகோதரர் க்ருணால் பாண்டியாவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளோம். நாங்கள் ஒவ்வொரு முறை ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டபோதும் எங்களின் வாழ்வின் நிலை மென்மேலும் உயர்ந்துள்ளது. ஆனால், பணம் எங்களை கிரிக்கெட் மீதான ஆர்வத்திலிருந்து சற்றும் அசைக்கவில்லை.




பணம் பெருகும் போது நமக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள திடமான மனம் வேண்டும். அதனால், எங்களால் ஒரு உண்மையை ஆழமாகப் புரிந்தது. கிரிக்கெட்டில் பணம் இருப்பது எனக்குத் தெரியும். அதனால் தான் நான் கிரிக்கெட்டுக்கு வந்தேன். பணம் நல்ல விஷயம் தான். அது நிறைய விஷயங்களை மாற்றியமைக்கும். அதற்கு நானே நல்ல உதாரணம். கிரிக்கெட்டுக்கு வராவிட்டால் நான் பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்திருப்பேன். ஆனால் எனக்கு எப்போதுமே எனது குடும்பம் தான் முதன்மை. என் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால் கிரிக்கெட்டை தேர்வு செய்தேன். ஆனால், எந்தச் சூழலிலும் கிரிக்கெட்டை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். நான் கிரிக்கெட்டில் பணம் இருக்கிறது என்று பேசவும் காரணம் இருக்கிறது.


கிரிக்கெட்டில் பணம் சம்பாதிக்கலாம் என்பதை வெளிப்படையாகப் பேசாவிட்டால் இளைஞர்கள் கிரிக்கெட்டை ஏன் எந்த ஒரு விளையாட்டையுமே தொழிலாக தேர்வு செய்ய மாட்டார்கள். அதனால் தான் நான் பணத்தைப் பற்றி பேசுகிறேன்.


என்னிடம் 2019ல் ஒருவர் பேசும்போது, இளைஞர்களுக்குப் பணம் பிரதானமாக இருக்கக் கூடாது என்று அறிவுரை சொன்னார். ஆனால் நான் அதை மறுத்தேன். ஒரு கிராமத்து இளைஞன் நகரத்துக்கு வந்து அவனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து சம்பாதித்தால் அவன் உடனை அந்த சம்பாத்தியத்தை பெற்றோருக்கு, உறவுகளுக்கு மடைமாற்றுவான். பணம் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்று கூறினார்.


ஹர்திக் பாண்டியா இதுவரை 11 டெஸ்ட் மேட்ச், 63 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 49 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.