உலகக் கோப்பை 2023ல் கத்துக்குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளை வீழ்த்தி கதற வைத்தனர். இந்த உலகக் கோப்பையில் இப்படி ஒரு நிகழ்வு நடக்குமா என்று யாரும் எதிர்பார்க்காத வேளையில் நடந்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 


இப்படி இருக்க, நெதர்லாந்து அணி மற்றொரு பட்டியலில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளை பின் தள்ளி முதலிடத்தில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால், அதுதான் உண்மை! தற்போது நெதர்லாந்து அணி பீல்டிங் பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற முன்னணி அணிகளையும் சிறப்பான பீல்டிங்கால் நெதர்லாந்து அணி தோற்கடித்துள்ளது. 


கேட்சு பிடிப்பதில் முதலிடம்: 


நெதர்லாந்து அணி இதுவரை உலகக் கோப்பையில் அதிக கேட்சுகள் பிடித்து முதலிடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் இந்தியா அணி இந்த பட்டியலில் அவர்களுக்கு கீழே இரண்டாவது இடத்தில் உள்ளது. 


இதுவரை நடந்த போட்டியில், நெதர்லாந்தின் கேட்ச்சிங் திறன் அதிகபட்சமாக 87 சதவீதமாக உள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய அணி 83 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து 82 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து 81 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் 79 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. 






இதைத் தொடர்ந்து, வங்கதேசம் 77 சதவீதத்துடன் ஆறாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 77 சதவீதத்துடன் ஏழாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 67 சதவீதத்துடன் எட்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 65 சதவீதத்துடன் ஒன்பதாவது இடத்திலும், இலங்கை 65 சதவீதத்துடன் 10வது இடத்திலும் உள்ளன. எப்போதும் பீல்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, இந்த உலகக் கோப்பையில் கேட்சுகளை பிடிப்பதில் இதுவரை மிகவும் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


2023 உலகக் கோப்பையில் கேட்சுகள் எடுத்த அணிகளின் சதவிகிதம்: 



  1. நெதர்லாந்து - 87%

  2. இந்தியா - 83%

  3. நியூசிலாந்து - 82%

  4. இங்கிலாந்து - 81%

  5. பாகிஸ்தான் - 79%

  6. வங்கதேஷம் - 77%

  7. தென்னாப்பிரிக்கா - 77%

  8. ஆப்கானிஸ்தான் - 67%

  9. ஆஸ்திரேலியா - 65%

  10. இலங்கை - 65%


ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடும் நெதர்லாந்து அணி: 


2023 உலகக் கோப்பையின் ஐந்தாவது போட்டியில் தற்போது நெதர்லாந்து டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வருகிறது. அந்த அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், அந்த வெற்றியும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக பதிவானது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் நெதர்லாந்து அணி 81 ரன்களாலும், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 99 ரன்களாலும் தோல்வியடைந்தது. பின்னர் மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. எனினும் இதன் பின்னர் இலங்கைக்கு எதிரான நான்காவது போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.