மகளிர் யு-19 உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தகுதி சுற்று போட்டியில் நேற்று நேபாள் மற்றும் யுஏஇ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பேட்டிங் செய்தது.
யுஏஇ அணியின் இடது வேகப்பந்துவீச்சாளர் மஹிகா கவுரின் பந்துவீச்சை தொடக்கம் முதலே நேபாள் அணி சமாளிக்க திணறியது. அவர் 4.2 ஓவர்கள் வீசி 2 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மறுமுனையில் இந்துஜா நந்தகுமார் 6 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மொத்தமாக 8.1 ஓவர்கள் விளையாடிய நேபாள் அணி 8 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய யுஏஇ அணி வேறும் 8 பந்துகளில் 9 ரன்களை அடித்து போட்டியை வென்றது. நேபாள் அணியில் 6 வீராங்கனைகள் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். மொத்தமாக அந்த அணியின் சிநேகா மஹாரா அதிகபட்சமாக 3 ரன்கள் எடுத்திருந்தார்.
மகளிர் யு-19 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகளில் நேபாள்,யுஏஇ,பூடான்,தாய்லாந்து,கத்தார் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்று உள்ளன. இந்தத் தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக மகளிர் யு-19 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுவிடும். ஆகவே அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன. முன்னதாக நேபாள் அணி கத்தார் அணிக்கு எதிராக 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்