நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த புபுடு தசனாயகா தன்னுடைய பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் நேபாள் அணியின் புதிய பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக 69 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 130 ஒருநாள் போட்டிகளில் மனோஜ் பிரபாகர் விளையாடியுள்ளார். அத்துடன் இவர் பல்வேறு ரஞ்சி அணிகளின் பயிற்சியாளராக இருந்துள்ளார். தன்னுடைய நியமனம் தொடர்பாக மனோஜ் பிரபாகர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நேபாள நாட்டில் கிரிக்கெட் விளையாட்டிற்கு அதிக ஆர்வம் உள்ளது. ஆகவே அந்த நாட்டு அணியின் பயிற்சியாளராக செயல்பட மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சவாலை நான் உற்று நோக்கியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2016ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். நேபாள் அணி இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை. அத்துடன் தற்போது ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் கிரிக்கெட் சூப்பர் லீக் தொடரில் நேபாள் அணி 20 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக நேபாள அணியின் பயிற்சியாளராக இருந்த புபுடு தசனாயகா கனடா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தற்போது நேபாள அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம் வந்துள்ளது.
வெளிநாட்டு அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்த இந்தியர்கள்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலர் வெளிநாட்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளனர். லால் சந்த் ராஜ்பூட் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாவே அணிகளின் பயிற்சியாளராக இருந்துள்ளார். அதேபோல் முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் கென்யா அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். முன்னாள் வீரர் ராபின் சிங் ஹாங்காங் மற்றும் அமெரிக்கா அணிகளின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர்களின் பட்டியலில் தற்போது மனோஜ் பிரபாகர் இணைந்துள்ளார். இவர்கள் தவிர வெளிநாட்டு அணிகளின் பந்துவீச்சு, பேட்டிங் ஆலோசகர்களாகவும் சில இந்திய வீரர்கள் பணியாற்றி உள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து ஆலோசகராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்