இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய கடைசி மற்றும் 5வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 188 ரன்களை குவித்தது. ஸ்ரேயாஸ் அதிரடியாக ஆடி 60 ரன்களையும், தீபக்ஹூடா 38 ரன்களையும், ஹர்திக் 28 ரன்களையும் விளாசினர். 189 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், இந்த போட்டியில் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் இளம் வீரர் ரவி பிஷ்னோய் 2.4 ஓவர்கள் பந்துவீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விககெட்டுகள் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதாவது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் 10 விக்கெட்டுகளையும் இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்களே கைப்பற்றினர்.
டி20 கிரிக்கெட் போட்டியில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்துவீச்சாளர்களே கைப்பற்றியிருப்பது இதுவே முதன் முறை ஆகும். இது டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாற்றுச் சாதனை ஆகும். அதுமட்டுமின்றி இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. அடுத்து வரும் உலககோப்பை டி20 போட்டித் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற போட்டியில் ரவிபிஷ்னோய், குல்தீப் யாதவ் மற்றும் அக்ஷர் படேல் அசத்தியதன் மூலம் அவர்கள் கண்டிப்பாக அடுத்து வரும் உலககோப்பை தொடரில் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலககோப்பைத் தொடருக்கு அனுபவமும், இளமையும் கலந்த இந்திய அணியை தயார் செய்ய பி.சி.சி.ஐ. நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்