பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு 2022 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தங்க பதக்க போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 65 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் இந்திய அணியின் விக்கெட்கள் மளமளவென சரிந்ததால் இந்திய அணி தங்க பதக்கத்தை வெல்ல முடியமால் போனது. கடைசி 5 இந்திய விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா 13 ரன்களுக்குள் வீழ்த்தியது. ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லே கார்ட்னர் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 162 ரன்களை விரட்டிய இந்தியா 152 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெள்ளி பதக்கத்துடன் நாடு திரும்பியது.
இந்த நிலையில், இந்திய மகளிர் அணியின் பேட்டிங் குப்பை என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் அசாருதீன் கடுமையாக சாடியுள்ளார். அதில், ”இந்திய மகளிர் அணியின் பேட்டிங் குப்பை. பொது அறிவு இல்லை. வெற்றி அவர்கள் கையில் இருந்தும் அதை முற்றிலுமாக தவறவிட்டார்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றதை பாராட்டியுள்ளார். இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் அவர்கள் இந்தியர்களின் இதயங்களை வென்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,” “இந்தியா நன்றாக விளையாடியது. நீங்கள் இறுதிப் போட்டியில் தோற்றிருக்கலாம். ஆனால் நீங்கள் நிச்சயமாக எங்கள் இதயங்களை வென்றீர்கள். ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரின் அற்புதமான ஆட்டம் முழுவதும் சிறப்பாக இருந்தது. தீப்தி ஷர்மா எப்போதும் நம்பகமானவர் மற்றும் ரேணுகா சிங் தாக்கூர் போட்டியில் சிறந்து விளங்கினார் 🥈 #PROUD" என்று மிதாலி ராஜ் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
