சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் உருவாக்கிய புதிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். இதில் இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் பேசியது, பள்ளி கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அண்ணன் ஜெயபிரகாஷ் இருவரும் 2010ல் நமது கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என 12 ஆம் வகுப்பு படிக்கும்போது பேசி இருக்கிறோம். அதோடு கனவு இன்று நினைவாகியுள்ளது. மிகவும் ஆச்சரியமாகவும், பெருமையாகவும் உள்ளது. நமது ஊரில் பல வசதிகளுடன் மைதானம் அமைத்துள்ளோம். இதனை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இங்கிருந்து பெரிய இடத்திற்கு செல்லவேண்டும் அதற்காக தான் இந்த மைதானம். சேலம் மாவட்டத்தில் தற்போது இரண்டு இடங்களில் மட்டுமே புல் கிரிக்கெட் மைதானம் உள்ளது. 



புல் தரையில் கிரிக்கெட் விளையாடும்போது சர்வதேச அளவிற்கான பயிற்சி இதில் கிடைக்கும். இந்த மைதானம் ஆரம்பித்துள்ளோம். கிராமப்புற இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கிராமப் பகுதியில் இருந்து இளைஞர்கள் பெருமளவு வருகின்றனர். திறமை இருந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் சாதிக்க முடியும். இதற்கு நானே முன் உதாரணம். எனக்கு இது பொன்னான நாள். இந்தநாளை என் வாழ்வில் மறக்கமுடியாது என்று பேசினார்.



இதுபோன்ற பயிற்சி அளிக்கப்படும் என்ற செய்தியாளர் கேள்விக்கு, பேசிய நடராஜன், சிறுவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பயிற்சி அளிக்கப்படும். சிறுவர்களை கையாளுவது சுலபம். மைதானத்திற்கான கட்டணம் இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்காக குறைந்த அளவு பெற்றுக் கொள்ளப்படும். அடுத்துவரும் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டுமென கவனமாக உள்ளேன். அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளேன். மேலும் டிஎன்பிஎல், தமிழக கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறேன். இதில் சிறப்பாக ஆடினால் பெரிய போட்டிகளில் பலன் தரும் எனவும் பேசினார்.