சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியில் புதிதாக கிரிக்கெட் மைதானத்தை துவக்குவதற்கு முடிவு செய்து அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் வீரர் நடராஜன் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கிரிக்கெட் மைதானம் தயாரான நிலையில் இன்றையதினம் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நேரில் மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக் மைதானத்தை பார்வையிட்டார்.
இதைதொடர்ந்து நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில், "சிறிய கிராமத்தில் இருந்து இந்திய அணியில் விளையாடிய முதல் வீரர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, இவரைத் தொடர்ந்து தற்போது கிராமப்புறங்களில் இருந்து பலர் இந்திய அணிக்கு விளையாட வந்துள்ளனர். இதற்கு முழுக்க முழுக்க வீரர்களின் விடாமுயற்சியும் திறமை மட்டுமே காரணம்.
இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் இறுதி போட்டியில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர்கள் நடராஜன் ஏன் விளையாட வரவில்லை என்று கேட்கிறார்கள் என்றால், அந்த அளவிற்கு நடராஜன் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி வரும் எனக்கு புதிய மைதானத்தை அமைக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது இல்லை. இதை நடராஜன் சாதித்து காட்டியுள்ளது சாதாரண விஷயம் அல்ல. கிராமப்புறங்களில் உள்ள நிறைய இளைஞர்கள் ஐபிஎல் போட்டிகள், இந்திய அணியில் விளையாட கடுமையாக உழைக்க வேண்டும். சின்ன கிராமத்திலிருந்து இந்திய அணிக்கு ஆடி நடராஜன், ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். ஒரு மைதானத்தை கட்டி நடராஜன் போன்று கிராமங்களில் உள்ள இளைஞர்கள் பெரிய இடத்திற்கு போக வேண்டும் என்று நினைப்பது சிறந்ததாகும்" எனப் பேசினார்.
இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் விஜய்சங்கர் பேசுகையில், கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமென்றால் இந்திய அணியில் விளையாடலாம் என்பதற்கு நடராஜன் ஒரு உதாரணம் என்று பேசிய அவர், கிராமப்புற இளைஞர்கள் இதனை பயன்படுத்தி முன்னேற வேண்டும் எனவும் கூறினார்.
பின்னர் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தில் நடராஜன் பந்து வீச நடிகர் யோகி பாபு பேட்டிங் செய்தார். அப்போது தினேஷ் கார்த்திக் கீப்பிங் செய்தார். இதைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக் வந்து வீச நடராஜன் பேட்டிங் செய்தார். இதனை சின்னப்பம்பட்டி பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் யோகி பாபு, விஜய் டிவி புகழ், கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் அசோக் சிகாமணி, டிஎன்பிஎல் நிர்வாகிகள் மற்றும் டிஎன்பிஎல் திருச்சி அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.