இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிப்ரவரி 17ம் தேதி தொடங்குகிறது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 132 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அஸ்வினின் பங்கு முக்கியமானது. முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸையும் சேர்த்து மொத்தம் 8 விக்கெட்களை வீழ்த்தினார். அதோடு, முதல் இன்னிங்ஸில் நைட் வாட்ச்மேனாக களமிறங்கி 32 ரன்களையும் அடித்தார்.
அஸ்வின் முதல் இன்னிங்ஸில் முதல் விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமான 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
முதல் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு, 2வது போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி டெல்லிக்கு சென்றது. இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டியானது நாளை காலை இந்திய நேரப்படி 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆஸ்திரேலியா அணி தீவிர பயிற்சியில் களமிறங்கியுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் அனுபவம் வாய்ந்த ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயன், ரவிசந்திரன் அஷ்வினால் என் மனைவி எனது மீது கடும் கோபம் கொண்டார் என தெரிவித்தார்.
இதுகுறித்து நாதன் லயன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ அஸ்ன் ஒரு சிறந்த பந்துவீச்சாளர், அவருக்கு எதிரான கூற என்ன இருக்கிறது. அஸ்வின் தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர் சாதனையே அவர் யார் என்று சொல்லும். உண்மையை சொன்னால் நான் அஸ்வினைவிட முற்றிலும் மாறுபட்ட பந்துவீச்சாளர். நான் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு இந்தியா வருவதற்கு முன்பாக அஸ்வின் வீடியோவை பார்த்தேனா என்று நீங்கள் என்னிடம் கேட்டால், ஆமாம் என்று தயங்காமல் சொல்லுவேன்.
இங்கு வருவதற்கு முன்பு பல நாட்கள் பல மணிநேரங்கள் அஸ்வின் வீசிய பந்துவீச்சுகளை உட்கார்ந்து என் மடிக்கணினியில் பார்த்தேன். இதனால் என் மனைவிக்கு என்மேல் அதிகமாக கோபம் ஏற்பட்டு எங்களுக்கு சண்டையே வந்துவிட்டது. அவரது வீடியோக்களை பார்த்து நிறைய கற்று கொண்டேன். இன்னும் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஒட்டுமொத்த இந்திய அணி:
ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி,ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்) இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி,முகமது சிராஜ், சூர்ய குமார் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ்.
இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்