போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளின் இறுதி அமர்வுக்குப் பிறகு விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோசுவா டா சில்வா இடையேயான பேச்சு ஸ்டம்ப் மைக்கில் கேட்டது பலரை நெகிழ்ச்சி அடைய செய்தது.


கோலி ரசிகரான மேற்கிந்தியத் தீவுகள் வீரரின் தாயார்


முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி தனது 500வது சர்வதேச போட்டியில் சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்தார், மேலும் அவரது தீவிர ரசிகரான ஜோஷ்வா டா சில்வாவின் தாயாரையும் ஆட்டம் முடிந்ததும் சந்தித்தார். 2 ஆம் நாள் ஆட்டதின்போது, ஜோஷ்வா கோலியிடம், அவரது தாயார் உங்களது மிகப்பெரிய ரசிகை என்றும், அவர் எனக்காக அல்ல, நீங்கள் விளையாடுவதைப் பார்ப்பதற்காக மட்டுமே மைதானத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஜோஷ்வாவின் வார்த்தைகள் ஸ்டம்ப் மைக்கில் கேட்ட நிலையில், அந்த வீடியோ கிளிப்புகள் வைரல் ஆகின.






அம்மா ஆண்டு முழுவதும் மகிழ்வாக இருப்பார்


ஆட்டம் முடிந்ததும், ஜோஷ்வாவின் தாய், இந்திய அணி வீரர்கள் செல்லும் பேருந்துக்கு அருகில் கோலியைச் சந்தித்து, அவரைக் கட்டி அணைத்து, கண்ணீர் விட்டு அழுதார். இதற்கிடையில், ஜோஷ்வா அந்த தருணத்தை புகைப்படம் எடுத்தார். இந்த தருணத்தை குறித்து பதிலளித்த 25 வயதான ஜோஷ்வா, இதன் மூலம் தன் அம்மா இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பார் என்று வெளிப்படுத்தினார்.


தொடர்புடைய செய்திகள்: IND Vs WI Test: ஆஹா..! பொறுப்பான ஆட்டத்தால் டஃப் கொடுக்கும் மேற்கிந்திய தீவுகள்.. இந்தியா 209 ரன்கள் முன்னிலை


ஆட்டம் முடிந்ததும் சந்தித்த கோலி


பிசிசிஐயிடம் பேசிய அவர், "எனது அம்மா இந்த டெஸ்ட் போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு, விராட் கோலியை பார்க்க விரும்பினார், என்னை அல்ல," என்று கூறினார். "எனவே, இது வேடிக்கையானது. நான் அதைப் பற்றி அவரிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆட்டம் முடிந்து அவர் பேருந்தில் இருந்தபோது, என் அம்மா, 'பார், விராட் இருக்கிறார்' என்று கூறினார். நான் உடனே சென்று ஜன்னலை தட்டினேன். அவர் வெளியே வந்து என் அம்மாவை சந்தித்தார்," என்று கூறினார்.






2வது டெஸ்ட்


2வது நாளில் கோஹ்லி 206 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் குவித்து தீயாக செயல்பட்டார். ஆனால் அவரது ஆட்டம் ரன் அவுட் மூலம் முடிவுக்கு வந்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 438 ரன்களை குவித்தது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் 74 பந்துகளில் 57 ரன்களை குவித்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.


இதற்கிடையில், கேப்டன் ரோஹித் 143 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆர் அஷ்வின் ஆகியோர் முறையே 61 மற்றும் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் நிதானமாக ஆடி வருகின்றனர். 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 229 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் உள்ளனர். விரைவாக அவர்களது விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டால் இந்த ஆட்டம் டிரா-வில் முடியும் வாய்ப்பு நிறையவே உள்ளது.