முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இன்று ஓய்வுபெறுவதாக தனது சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இன்று, மிகுந்த நன்றியுடனும் பணிவுடனும், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். 2002-2018 வரையிலான எனது பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான ஆண்டுகள், ஏனெனில் இது விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமையாகும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ), சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் செம்ப்ளாஸ்ட் சன்மார் எனக்கு வழங்கிய வாய்ப்புகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.






எனது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் உதவி ஊழியர்கள் அனைவருக்கும்: உங்கள் அனைவருடனும் விளையாடியது ஒரு முழுமையான பாக்கியம், மேலும் எனது கனவை நனவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி. சர்வதேச விளையாட்டின் ஏற்ற தாழ்வுகளில் என்னை ஆதரித்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு, உங்கள் அனைவருடனும் நான் செலவழித்த தருணங்களை என்றென்றும் போற்றுவேன், உங்களின் ஆதரவு எப்போதும் எனக்கு ஊக்கமளிக்கும்.” என்று தெரிவித்தார். 


முரளி விஜய் கிரிக்கெட் வாழ்க்கை: 


இந்தியாவுக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முரளி விஜய் 3982 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 38.28 என்ற சராசரியில் 12 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடித்துள்ளார். அதேபோல், இந்தியாவுக்காக 17 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 106 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முரளி விஜய், இரண்டு சதங்கள் மற்றும் 13 அரைசதங்களுடன் 2,619 ரன்கள் எடுத்துள்ளார். 


முரளி விஜய் 2008 இல் இந்தியாவுக்காக அறிமுகமானார், அவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 2018 இல் விளையாடினார். 38 வயதான முரளி விஜய் , இந்திய அணியின் ஸ்டைலான தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். 


கடந்த ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) போட்டியில்  நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிராக விளையாடிய முரளி விஜய் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்காக 66 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். 


டெஸ்ட் வாய்ப்பு:


ஐபிஎல் தொடரில் முரளி விஜய் அதிரடி ஆட்டக்காரராக தன்னை முன்னிலை படுத்தி கொண்டாலும், இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரராக சில ஆண்டுகள் நிலைநிறுத்தி கொண்டார். பிரபல தொடக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோரின் ஓய்வுக்குப் பிறகு, முரளி விஜய் அணியின் முக்கிய தொடக்க வீரராக டெஸ்டில் அசத்தினார். உள்ளூர் தொடர்களில் சில ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டாலும், வெளியூர் சுற்றுப்பயணங்களில் முரளி விஜயின் செயல்திறன் 2018 இல் மோசமடைந்தது. மேலும் அவர் 2018-19 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார்.


அதன் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் விஜய் பெரிய அளவில் மீண்டு வரவில்லை. மீண்டும் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினாலும், தேர்வாளர்களை கவர விஜய் போதுமான ரன்களை எடுக்கவில்லை. விஜய் தனது டெஸ்ட் வாழ்க்கையை நீட்டிப்பதற்கான போராட்டத்தில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் ஷுப்மான் கில் போன்ற வீரர்கள் தங்களது திறமைகளை திறம்பட வெளிப்படுத்த, முரளி விஜயின் டெஸ்ட் வாழ்க்கை இருள் மங்கியது.